கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் சாலையில் 14 யானைகள் கொண்ட கூட்டம் உலா வந்தது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் நிலவும் கடும் வறட்சி மற்றும் உணவு பற்றாக்குறை காரணமாக யானைகள் வனப்பகுதியில் இருந்து அருகில் உள்ள கிராமங்களுக்குப் படையெடுத்து வரும் நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காகக் கிராமங்களுக்குள் புகும் காட்டு யானைகள், விளை நிலங்களைச் சேதப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வீட்டில் வைத்திருக்கும் அரிசி, மாட்டுத் தீவனங்களைச் சாப்பிடுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாகக் கோயம்புத்தூர் மாவட்டம் கரடிமடை, தீத்திபாளையம் பகுதிகளில் சுற்றி வரும் 14 யானைகள் கொண்ட கூட்டம், அங்கிருந்து வெளியேறி இன்று காலை 5.30 மணி அளவில் மாதம்பட்டி வழியாக வந்துள்ளது. இது குறித்து, கோயம்புத்தூர் வனத்துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு வந்த வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த கரடி.. பெண்ணை கடித்ததால் பரபரப்பு - வெளியான சிசிடிவியால் மக்கள் அச்சம்! - Bear Attack In Tirunelveli
அதன் பின், அந்த யானைக் கூட்டம் தொண்டாமுத்தூர் சாலை வழியாக தீனாம்பாளையம், ஓனாப்பாளையம் வழியாக யானை மடுவுக்குள் சென்றது. இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், “வனப்பகுதியில் நிலவும் உணவு பற்றாக்குறை காரணமாக யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறுகிறது. ஆகையினால் இரவு நேரங்களில் மழை அடிவாரத்தில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
விளை நிலங்களுக்குள் யானைகள் புகுந்தால், அதனை சுயமாக விரட்ட முயற்சிகள் மேற்கொள்ளக்கூடாது. வனத்துறையினருக்குத் தகவல் அளித்தால் உடனடியாக அங்கு வந்து யானைகளைப் பத்திரமாக வனப்பகுதியில் அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள்” என தெரிவித்துள்ளனர். இதனிடையே 14 யானைகள் கொண்ட கூட்டம் சாலையில் உலா வரும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: ஒரே ஜம்ப்..! அரியலூர் அருகே செந்துறை அரசு மருத்துவமனையில் சுவரைத் தாவிக் குதித்த சிறுத்தை.. சிசிடிவி வைரல் - Leopard Movement In Ariyalur