திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே கோரிக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட இடுகாடு உள்ளது. இங்கு இறந்தவர்களை புதைப்பதற்கு மட்டுமே அனுமதி இருக்கிறது. எரிக்கும் வழக்கம் கொண்டவர்கள், பழனியில் உள்ள நவீன எரிவாயு மயானத்தில் மட்டுமே உடலை தகனம் செய்ய முடியும் என்ற வழக்கம் உள்ளது.
இந்த நிலையில், நேற்று (மே 17) மாலை ஆடு மேய்க்கச் சென்றவர்கள் இடுகாடு பகுதியில் எரிந்த நிலையில் தலையில்லாத உடல் பகுதி எலும்புக்கூடாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த கீரனூர் காவல்துறையினர், அதனை மீட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், எரிந்த நிலையில் கண்டெடுக்கபட்ட எலும்புக்கூடு சிறுமியாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது.
அதேநேரம், வேறொரு பகுதியில் இருந்து கொலை செய்துவிட்டு கோரிக்கடவு சுடுகாட்டில் தலையில்லாத உடல் பகுதியை தீ வைத்து மர்ம நபர்கள் எரித்துள்ளார்களா என்ற கோணத்தில் காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கோரிக்கடவு பகுதியில் நேற்று முன்தினம் யாரும் உயிரிழக்கவில்லை என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: "மன அழுத்தம் அதிகம் ஏற்படுகிறது.." - நீதிபதியிடம் முறையிட்ட சவுக்கு சங்கர்! - Savukku Shankar Issue