சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவில் நேற்று (மே.05) இரண்டு ராட்வைலர் நாய்கள் 5 வயது சிறுமியை கடித்து குதறியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாய் உரிமையாளர் புகழேந்தி மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆயிரம் விலக்கு போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் காப்பாற்ற முயன்ற தாய் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், இச்சம்பவம் குறித்து அதே பகுதியைச் சேர்ந்த ராஜா கூறியதாவது, "புகழேந்தி இதே பகுதியில் ரத்த வங்கு (Blood Bank) நடத்தி வருகிறார். அதோடு அவர் இரண்டு ராட்வைலர் நாய்களையும் வளர்த்து வருகிறார். அவர் ரத்த வங்கி நடத்தி வரும் ஒரே காரணத்திற்காக அவர் வளர்த்து வரும் நாயால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து யாரும் புகார் அளிக்கவில்லை. முன்னதாக ஒருவரை இந்த நாய் துரத்தியுள்ளது. அதேபோல் தெரு நாய்களையும் தாக்கி உள்ளது.
இந்த நிலையில், 5 வயது சிறுமியை புகழேந்தியின் ராட்வைலர் நாய்கள் கடித்துள்ளது. ராட்வைலர் வளர்க்க தடை இருந்தும் அவர் வளர்த்து விற்பனை செய்து வருகிறார். சிறுமியின் தாய் சோனியா அவரின் உயிரைப் பணைய வைத்து நாயிடமிருந்து சிறுமியை பலத்த காயங்களுடன் மீட்டார்.
ஆனால், நாயின் உரிமையாளர் புகழேந்தி உடனடியாக சென்று நாயை பிடிக்காமல் நின்று வேடிக்கை பார்த்து உள்ளார். நாயை பிடித்திருந்தால் சிறுமிக்கு இவ்வளவு காயங்கள் ஏற்பட்டிருக்காது. இது போன்ற நாய்களை வளர்க்க தடை இருந்தும் அவர் வளர்த்து வந்துள்ளார். அதுமட்டுமல்லாது இனப்பெருக்கம் செய்து விற்பனையும் செய்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து, பூங்காவனம் என்பவர் கூறுகையில், "பூங்காவை சோனியா சுத்தம் செய்து கொண்டிருந்த போது இச்சம்பவம் நடத்துள்ளது. இரண்டு நாய்களுக்கும் சங்கிலி மற்றும் வாயில் பாதுகாப்பு கவசம் எதுவும் அணிவிக்காமல் அழைத்து வந்துள்ளார்.
நாய் கடிக்கும் பொழுது அந்த இடத்தில் யாரும் இல்லை. அவரது தாய் சோனியா தான் நாய்களுடன் போராடி குழந்தையை காப்பாற்றினார். ஆனால், நாயின் உரிமையாளர் புகழேந்தி தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். குழந்தைக்கான அனைத்து சிகிச்சைகளையும் அவர் செய்து தர வேண்டும்.
அதேசமயம் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஏற்கனவே, நாய் குறித்து புகழேந்தியிடம் புகார் அளித்தோம். அதற்கு "கடித்தால் நான் பார்த்துக்கொள்கிறேன். உங்களுக்கு என்ன?" என அலட்சியமாக பதில் கூறியதாக பூங்காவனம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "படிப்ப மட்டும் எடுத்துக்க முடியாது" - பிளஸ் 2 தேர்வில் அசத்திய நாங்குநேரி சின்னத்துரை! - Nanguneri Student Chinnadurai