சென்னை: ஆஸ்திரேலியா நாட்டில் மகள் வீட்டில் இருந்து மலேசியா வழியாக விமானத்தில் சென்னை திரும்பிய பெண், விமானம் வானில் பறந்தபோது தூக்கத்திலேயே மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நெசப்பாக்கத்தைச் சேர்ந்தவர் கலையரசி (58). இவருடைய மகள் ஆஸ்திரேலியா நாட்டில் வசிக்கிறார். இந்த நிலையில் கலையரசி இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள மகள் வீட்டிற்கு சென்று அங்கு தங்கியிருந்தார்.
அதன்பின்பு கலையரசி ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து இந்தியாவுக்கு திரும்புவதற்காக மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் ஆஸ்திரேலியாவில் இருந்து கோலாலம்பூர் வந்து அங்கிருந்து மற்றொரு மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மூலம் சென்னைக்கு நேற்று இரவு வந்து கொண்டு இருந்தார்.
அந்த மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று இரவு 11.10 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வந்து தரை இறங்கியது. பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து இறங்கினர். ஆனால், கலையரசி மட்டும் விமானத்தின் இருக்கையில் தலையை சாய்த்து கொண்டு தூங்குவது போல் இருந்துள்ளார்.
இதையும் படிங்க: "விமான சாகசத்தைக் காண வந்து உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு தான் பொறுப்பு" - அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
இதையடுத்து விமான பணிப்பெண்கள் சென்னை வந்துவிட்டது இறங்குங்கள் என்று கூறி கலையரசியை எழுப்பினர். ஆனால், அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை, தலை சாய்ந்து விழுந்தது. இதையடுத்து பணிப்பெண்கள் அதிர்ச்சி அடைந்து விமான கேப்டனுக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக சென்னை விமான நிலைய மருத்துவ குழுவினர் அவசரமாக விமானத்துக்குள் ஏறி கலையரசியை பரிசோதித்தனர். அப்போது கலையரசி ஏற்கனவே உயிர் இழந்தது தெரிய வந்தது. மேலும், கடுமையான மாரடைப்பு காரணமாக தூக்கத்திலேயே கலையரசி உயிர் பிரிந்துள்ளது என்றும் தெரிவித்தனர்.
இதையடுத்து சென்னை விமான நிலைய போலீசார் விரைந்து வந்து கலையரசியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து விமானம் முழுமையாக சுத்தப்படுத்தப்பட்டு, ஒரு மணி நேரம் தாமதமாக இன்று அதிகாலை ஒரு மணிக்கு சென்னையில் இருந்து கோலாலம்பூருக்கு 267 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்