சென்னை: நங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் நிர்மலா (59). இவர் சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய ஆணையகத்தில் தொலைபேசி இணைப்பக சூப்பிரண்டாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், நேற்றிரவு பணிக்காக உள்நாட்டு முனையம் வருகை பகுதியில் உள்ள அலுவலகத்திற்கு வந்தார்.
இன்று காலை 8 மணிக்கு பணி மாற்ற மற்றொரு பெண் அதிகாரி வந்தபோது அலுவலக கதவு மூடி இருந்துள்ளது. கதவை தட்டியும் நீண்ட நேரமாக திறக்காததால் அங்கிருந்த மற்ற ஊழியர்கள் உதவியுடன் கதவை திறந்தபோது நிர்மலா தற்கொலை செய்துகொண்டிருப்பதை கண்டனர்.
உடனே விமான நிலைய மருத்துவ குழுவினர் வந்து பரிசோதனை செய்தபோது, நிர்மலா இறந்துவிட்டார் என்பதை உறுதி செய்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் விமான நிலைய போலீசார் வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், டிசம்பர் மாதம் நிர்மலா பணி ஒய்வு பெற இருக்கும் நிலையில், கடந்த சில தினங்களாக மன அழுத்ததில் இருந்ததாக கூறப்படுகிறது. இவர் தற்கொலைக்கான காரணம் என்ன என்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தற்கொலை சம்பவம் சக ஊழியர்களுக்கிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல: சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் 104 அல்லது சிநேகா உதவி எண்களை அழையுங்கள். சிநேகா தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 044-24640050, மாநிலத் தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 104, இணைய வழித் தொடர்புக்கு - 022-25521111, மின்னஞ்சல் help@snehaindia.org அல்லது நேரில் தொடர்புகொள்ள, சிநேகா பவுண்டேஷன் ட்ரஸ்ட், 11, பூங்கா சாலை (பார்க் வியூ ரோடு), ஆர்.ஏ.புரம், சென்னை - 600028.
இதையும் படிங்க: இரவில் லிப்ட் கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை.. சிக்கிய வாலிபர்கள்.. தஞ்சையில் அதிர்ச்சி!