ஈரோடு: பெருந்துறை அருகே திங்களூரில் வாரந்தோறும் வியாழக்கிழமை காய்கறிகள் உட்பட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் சந்தை நடைபெறுவது வழக்கம். இந்தச் சந்தையில் தான் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ஏராளமான கிராம மக்கள் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். இந்த கூட்டத்தை பயன்படுத்தி மர்ம கும்பல் கடைகளில் கூட்டத்தோடு கூட்டமாக சேர்ந்து 100, 200 மற்றும் 500ஆகிய போலி ரூபாய் நோட்டுகளை கொடுத்து பொருட்களை வாங்கி வந்துள்ளனர்.
இதையடுத்து கள்ள நோட்டு புழக்கம் குறித்து திங்களூர் காவல் நிலையத்தில் வியாபாரிகள் பலர் அடுத்தடுத்து புகார்கள் அளித்தனர். புகாரின் அடிப்படையில், கள்ள நோட்டு புழக்கம் தடுப்பு குறித்து சந்தையில் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிலையில் கடந்த 25-ஆம் தேதி (வியாழக்கிழமை) சந்தைக்கு வந்த முதியவர் ஒருவர் 500 ரூபாய் நோட்டை கொடுத்து பழங்களை வாங்கியுள்ளார். இதையடுத்து பணத்தை வாங்கிய விற்பனையாளர் நோட்டை பார்த்து சந்தேகமடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன் பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், முதியவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
போலீசார் விசாரணையில், முதியவர் அளித்த வாக்குமூலம், "எனது பெயர் ஜெயபால் (வயது 70) ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் இக்கரைபள்ளி கிராமம், திருப்பூரில் டைலர் வேலை பார்த்த போது, மகன் ஜெயராஜ் (40), வீட்டில் யூடியூப் மூலம் கள்ள நோட்டு தயாரிப்பது எப்படி எனப் பார்த்து, அதற்காக வீட்டில் கலர் ஜெராக்ஸ் இயந்திரம் வைத்து பயிற்சி எடுத்து 100, 200 மற்றும் 500 நோட்டுகளை அச்சிட்டு, அதை மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பயன்படுத்தினால் மாட்டி கொள்ள மாட்டோம் என்ற எண்ணத்தில் கடந்த 6 மாதமாக சத்தியமங்கலம், கோபி, கொளப்பளூர், திங்களூர், பெருந்துறை போன்ற கிராமப்புற சந்தை மையமாக வைத்து புழக்கத்தில் விட்டோம்.
காய்கறி வாங்குவது போன்று தனது மனைவி சரசு மற்றும் உடன் வேலை செய்யும் மேரி மெட்டில்டா என்ற பெண்ணை பயன்படுத்தி கூட்டம் அதிகமாக உள்ள கடைகளில் போலி ரூபாய் நோட்டுகளை கொடுத்து குறைந்த அளவுக்கு பொருட்களை வாங்கி கொண்டு மீதி தொகையை பெற்று கொள்வோம்" என முதியவர் ஜெயபால் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து முக்கிய குற்றவாளியான ஜெயராஜ் அவரது தந்தை ஜெயபால், தாய் சரசு மற்றும் உடன் வேலை செய்யும் மேரி மெட்டில்டா ஆகிய நான்கு பேர் மீதும் இரண்டு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து திங்களூர் போலீசார் கைது செய்தனர்.
மேலும் கள்ள நோட்டு தயாரிக்க பயன்படுத்திய கலர் ஜெராக்ஸ் இயந்திரம் மற்றும் 2.85 லட்சம் ரூபாய் 100, 200 மற்றும் 500 கள்ளநோட்டுகள், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயபால் மற்றும் ஜெயராஜ் ஆகியோரை பெருந்துறை சிறையிலும், சரசு மற்றும் மேரி மெட்டில்டா ஆகியோரை கோவை பெண்கள் சிறையிலும் அடைத்தனர்.
இதையும் படிங்க: சத்தியமங்கலம் அருகே கார் - சரக்கு வேன் மோதி விபத்து: கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி!