மதுரை : மதுரையில் காணாமல் போன தங்களது வளர்ப்பு நாயைக் கண்டுபிடித்துக் கொடுப்பவருக்கு ரூ.5 ஆயிரம் பரிசுத் தொகை வழங்குவதாக, மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பொதுமக்கள் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த போஸ்டரில், "மதுரை, சிவகங்கை ரோடு கோமதிநகர் 6வது மெயின் ரோட்டில் இந்த நாய் கடந்த செவ்வாய்க்கிழமை காணாமல் போனதாகவும், இதன் பெயர் மேங்கோ (வயது 4) ப்ரவுன் நிறம், பெயர் மற்றும் தொடர்பு எண்ணுடன் கூடிய நீல நிற கழுத்துப்பட்டை அணிந்திருந்ததாகவும், நாயைக் கண்டுபிடித்து கொடுப்பவருக்கு ரூ.5 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்படும்" என அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், அந்த நாயின் பெயரான மேங்கோ என குறிப்பிட்டு அழைத்தோ அல்லது உணவளித்தோ பிடிக்கலாம் என்ற ஆலோசனையும் வழங்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து நாயின் உரிமையாளர் சங்கவியைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, "நான் சென்னையில் உள்ள ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறேன். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் வசித்து வரும் அடையாறு பகுதியில் குட்டியாகத் தெருவில் திரிந்தது.
இதையும் படிங்க : பார்த்து பார்த்து வரைந்த தவெக மாநாட்டின் விளம்பரங்கள் அழிப்பு! ஈரோடு நிர்வாகிகள் ஷாக்..!
அதனைத் தூக்கி வந்து வளர்த்து வந்தோம். மதுரையிலுள்ள என்னுடைய அம்மா வீட்டிற்கு வரும்போது இந்த நாயையும் தூக்கிக் கொண்டுதான் வருவோம். அதுபோன்று இந்த முறை வந்தபோது தான் கடந்த செவ்வாய்க் கிழமை வீட்டு வாசலில் இருந்த நாய் திடீரென காணாமல் போய்விட்டது.
எனது திருமணத்தின்போது வீட்டுக்கு வந்த நாய் என்பதால், என்னுடைய ஒரு வயது குழந்தையோடு மிகவும் துடிப்போடு விளையாடி மகிழும். தற்போது 'மேங்கோ' இல்லாமல் வீடே சோகமயமாகி உள்ளது. ஆகையால் எப்படியாவது எங்கள் மேங்கோ எங்களிடம் வர வேண்டும் என்பதற்காகவே இந்த போஸ்டரை ஒட்டினோம்" என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்