திண்டுக்கல்: அறுபடை வீடுகளில் 3ஆம் படை வீடான பழனி முருகன் கோயில் உலகப் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் தரிசனம் செய்ய தமிழ்நாடு மட்டுமின்றி, அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
நீதிமன்ற உத்தரவின்படி, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கிரி வீதிகளில் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கிரி வீதியில் உள்ள வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. இதனால், பழனி அடிவாரம் பாதவிநாயகர் கோயிலில் இருந்து கிரி வீதி மற்றும் கோயில்களைச் சுற்றி வரவும், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளை அழைத்துச் செல்லும் வகையிலும், பேட்டரி வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும், கோயிலில் ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் மட்டும் இயக்கப்பட்டு வந்த நிலையில், கூடுதல் ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் கூடுதல் பேட்டரி வாகனங்கள் இயக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தும் வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று கோயில் நிர்வாகம் சார்பில் ரூ.26 லட்சம் மதிப்பிலான புதிய ஆம்புலன்ஸ் வாகனமும், அமெரிக்காவில் பணிபுரியும் பக்தரின் சார்பில் ரூ.7 லட்சம் மதிப்பிலான பேட்டரி வாகனமும் பூஜை செய்யப்பட்டு பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
இது குறித்து, கோயிலுக்கு பேட்டரி வாகனத்தை நன்கொடை வழங்கிய ரவிச்சந்திரன் கூறுகையில், “எனது மகன் அகில், அவர் அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறார். அவரது வேண்டுதல் நிறைவேறியதால் நன்கொடையாக நாங்கள் இந்த பேட்டரி வாகனத்தை கோயில் நிர்வாகத்தின் உதவியுடன், மக்களுக்கு பயன் பெறும் வகையில் வழங்கியுள்ளோம்” என்றார்.
இதையும் படிங்க: லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி.. தெலங்கானாவில் நிகழ்ந்த சோகம்! - Telangana Accident