சென்னை: சென்னை வேளச்சேரி பிரதானச் சாலை எப்போதும் பரப்பரப்பாக காணப்படும் சாலையாகும். இச்சாலையில் மாநகர பேருந்து ஓட்டுநர் முருகேசன்(55) என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, பீனிக்ஸ் மால் அருகே சாலையில் இருந்த பள்ளத்தால் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார்.
அப்போது, பின்னால் வந்த இருசக்கர வாகனம் இவர் மீது மோதி இருவரும் நிலைத்தடுமாறி கீழே விழுந்தனர். இதில், வலதுபக்கம் விழுந்த முருகேசன் மீது பின்னால் வந்த சென்னை மாநகர பேருந்து(MTC) மோதியதில் நிகழ்விடத்திலேயே முருகேசன் உயிரிழந்தார்.
இதையும் படிங்க : பார்க்கிங்கால் வந்த பிரச்னை; சினிமா பாணியில் பூட்டை உடைத்து தள்ளிச்செல்லப்பட்ட கார்!
இதனைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து வந்த கிண்டி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார், சாலையில் இருந்த பள்ளத்தை மண் மற்றும் சிமெண்ட் கலவையை போட்டு சரிசெய்தனர்.
பின்னர், முருகேசன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கிண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, விபத்து நிகழ்ந்த போது அருகே இருந்த கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான விபத்தின் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்