மதுரை: திருச்சி மாவட்டம், கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த ஜெயமணி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "நான் கடந்த 1961ஆம் ஆண்டு இலங்கையில் பிறந்தேன். எனக்கும் வேணுகோபால் என்பவருக்கும் கடந்த 1978ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், நாங்கள் 1990ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்தோம்.
அப்போது எங்களுக்கு இந்தோ-இலங்கை (சிலோன்) ஒப்பந்தம் 1964ன் படி இந்திய குடியுரிமை வழங்கி, திருப்போரூர் வட்டாட்சியர் சான்றிதழ் அளித்தார். இந்த நிலையில், எனது வெளிநாடு செல்லக்கூடிய கடவுச்சீட்டில் குளறுபடி இருந்தது. அதனை மண்டல சிறப்பு துணை ஆட்சியர் ஆய்வு செய்து, எங்களுக்கு இலங்கை அகதிகள் என சான்றிதழ் அளித்தார்.
எனவே, இலங்கையில் இருந்து 1990ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த எங்களுக்கு சிலோன் ஒப்பந்தம் 1964ன் படி இந்திய குடியுரிமைச் சான்றிதழை வழங்க வேண்டும். மேலும், ஏற்கனவே திருப்போரூர் வட்டாட்சியர் அளித்த இந்திய குடியுரிமைச் சான்றிதழை உறுதி செய்து, மண்டல சிறப்பு துணை ஆட்சியர் வழங்கிய இலங்கை அகதிகள் என்ற சான்றிதழை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என்று மனுதாரர் ஜெயமணி கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, "மனுதாரருக்கு திருப்போரூர் வட்டாட்சியர் வழங்கிய சான்றிதழ் சரியானது. ஆகவே, மண்டல சிறப்பு துணை ஆட்சியர் வழங்கிய உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மேலும், இலங்கையில் இருந்து 1990ஆம் ஆண்டு தாயகமான இந்தியாவிற்கு வந்த மனுதாரருக்கு சிலோன் ஒப்பந்தம் 1964ன் படி இந்திய குடியுரிமைச் சான்றிதழை காலதாமதமின்றி வழங்க வேண்டும்" என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: தமிழகத்தின் 2வது சிறந்த மாநகராட்சியாக தூத்துக்குடி தேர்வு!