புதுக்கோட்டை: புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா நேற்று(வெள்ளிக்கிழமை) பணி நிமித்தமாக திருமயம் நோக்கி தனது அரசு காரில் சென்றுள்ளார். காரை அரசு ஓட்டுநர் காமராஜ் ஓட்டியுள்ளார். இந்த நிலையில், காரைக்குடி – திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள நமணசமுத்திரம் என்ற பகுதியின் வழியாக கோட்டாட்சியரின் கார் சென்றுள்ளது.
அப்போது, லேனா விளக்கு சுங்கச்சாவடி அருகில் ராமநாதபுரத்தில் இருந்து சென்னை நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பயாஸ் (25), பைசல் (22) என்ற இரண்டு இளைஞர்கள் பேருந்தை முந்தி செல்ல முயன்ற போது வருவாய் கோட்டாட்சியர் வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களும் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளனர். மேலும், உயிரிழந்த இருவரது உடல்களையும் மீட்டு உடற்கூராய்வுக்காக திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "துப்பாக்கியைப் பயன்படுத்த வேண்டும்".. நான்கு மாத தேடுதல் வேட்டை.. ஆல்வின் பிடிபட்டது எப்படி?
இதுமட்டும் அல்லாது, இந்த விபத்தில் வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா லேசான காயத்துடனும், கார் ஓட்டுநர் காமராஜ் பலத்த காயத்துடனும் புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, கோட்டாட்சியர் ஐஸ்வர்யா சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், ஓட்டுநர் காமராஜ் வலது கையில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக தொடர்ச்சியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே, நமணசமுத்திரம் போலீசார் இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், வருவாய் கோட்டாட்சியரின் அரசு வாகன ஓட்டுநர் காமராஜர் மீது நமணசமுத்திரம் போலீசார் அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனத்தை இயக்கியது, விபத்து ஏற்படுத்தியது, எதிரே வந்தவர்களை மரணமடைய செய்தது என்பது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.