சென்னை: சென்னை எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று வழக்கறிஞர்கள் விஜயகுமார் மற்றும் செந்தில் நாதன் ஆகியோர் வழக்கு தொடர்பாக பேசிக்கொண்டிருந்த போது தகராறு ஏற்பட்டதில் இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மாறி மாறி கைகளாலும், அங்கு இருந்த நாற்காலிகளாலும் தாக்கிக் கொண்டனர்.
பின்னர் எழும்பூர் உதவி ஆணையர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு சண்டையை தடுத்து நிறுத்தினர். இந்த தாக்குதலில் வழக்கறிஞர்கள் விஜய்குமார், விமல் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களுக்கு காயம் ஏற்பட்டு ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து எழும்பூர் காவல் நிலையத்தில் இருதரப்பும் புகார் அளித்தனர். இதனையடுத்து, செந்தில்நாதன் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்கறிஞர் விஜயகுமார், விமல் மற்றும் 10 பேர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வழக்கறிஞர் விஜயகுமார் அளித்த புகாரின் பேரில் வழக்கறிஞர் செந்தில்நாதன், சக்திவேல் மற்றும் ஆறு பேர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மோதலின் பின்னணி: சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவரது பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் காரில் செல்லும் போது விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த வழக்கை மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கை வழக்கறிஞர் விஜயகுமார் நடத்த ஆவணங்களைத் தயார் செய்தார்.
இந்நிலையில், மற்றொரு வழக்கறிஞர் செந்தில் நாதன் விஜயகுமாரை தொடர்பு கொண்டு, "மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு வாகன விபத்து வழக்குகள் அனைத்தையும் நான் தான் எடுத்து நடத்துவேன் என்றும், இந்த வழக்கு என்னிடம் தான் கொடுக்க வேண்டும்" என்று தொலைபேசியில் பேசியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் நேற்று எழும்பூர் நீதிமன்றத்திற்கு விஜயகுமார், செந்தில்நாதன் ஆகியோர் வந்தனர். பிறகு இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்திய போது, திடீரென இரு தரப்பினரும் மாறி மாறி மோதிக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், நீதிமன்ற வளாகத்தில் அங்கு இருந்த போலீசார் கண்முன்னே வழக்கறிஞர்கள் தாக்கி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: திடீரென ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட வழக்கறிஞர்கள்.. எழும்பூர் கோர்ட் வளாகத்தில் களேபரம்!