நீலகிரி: குன்னூர் அருகே உள்ள உழவர் சந்தை மாடல் ஹவுஸ் பகுதிகளில் கரடி சர்வ சாதாரணமாக உலா வந்துள்ளதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனால், வனத்துறையினர் குன்னூர் நகரப் பகுதியில் சுற்றித் திரியும் கரடியைப் பிடிப்பதற்கு கூண்டுகள் வைக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் அடர்ந்த வனங்கள் சூழ்ந்த பகுதியாகும். 65 சதவீதம் வனப்பகுதியைக் கொண்டுள்ள இப்பகுதியில் வன விலங்குகளான யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. தற்போது கோடை காலம் என்பதால், வனப்பகுதிகளில் நிலவும் வறட்சியின் காரணமாக வன விலங்குகள் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்கு வருவது அதிகரித்துள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
இவ்வாறு வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வன விலங்குகள், கால்நடைகள் மற்றும் மனிதர்களைத் தாக்குவது அவ்வப்போது நடைபெறுகிறது. இதனால் கிராம மக்கள் அச்சத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த இரு தினங்களாக குன்னூர் பேருந்து நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையம் பகுதியில் சுற்றித்திரிந்த ஒற்றைக் கரடி, தற்போது குன்னூர் அருகே உள்ள உழவர் சந்தை மாடல் ஹவுஸ் பகுதிகளில் இரவு நேரத்தில் உலா வந்துள்ளது. இதனை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் வீடியோ பதிவு செய்துள்ளனர்.
தற்போது அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. உழவர் சந்தை மாடல் ஹவுஸ் பகுதிகளில் இரவு நேரங்களில் கரடி உலா வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, வனத்துறையினர் உடனடியாக குன்னூர் நகரப் பகுதியில் சுற்றித் திரியும் கரடியைப் பிடிப்பதற்கு கூண்டுகள் வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வனத்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதனையடுத்து, குன்னூர் உழவர் சந்தை பகுதியில் உலா வந்த கரடி தற்போது சிம்ஸ் பார்க் அருகே உள்ள கிளப் ரோடு தனியார் பங்களா பகுதியில் சென்று ஓய்வு எடுத்து வருகிறது. இது குறித்து குன்னூர் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையிலான வனக்குழுவினர், பங்களா பகுதியில் இருந்து கரடியை அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்ல வழிவகைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கரடி நடமாட்டம் குறித்து அப்பகுதியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி மேற்கொள்ளப்படும். குடியிருப்புக்குள் வந்த கரடி வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்துள்ளது. இதுவரை ஒற்றைக் கரடி மனிதர்களை தாக்கும் செயலில் ஈடுபடவில்லை. உணவுப் பொருட்கள் உள்ள கிடங்குகளையும் சேதப்படுத்தவில்லை. எனவே, கரடி தானாகவே வனப்பகுதிக்குள் செல்ல வனத்துறையினர் முழு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இரவு நேரங்களில் அப்பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்ல வேண்டாம். பொதுமக்கள் கரடியை கண்டவுடன் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும், கரடியை ஆக்ரோச படுத்தும் செயல்களில் ஈடுபட வேண்டாம் என வனத்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். மேலும், அப்பகுதியில் வனத்துறைக் குழுவினர் கண்காணித்து வருகின்றனர். கரடி இரவு நேரம் வனப்பகுதியில் செல்ல அதிக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தொழில் முனைவோர் ஆக ஒரு வாய்ப்பு! 100% உதவித்தொகையுடன் மதுரையில் பயிற்சி..மிஸ் பண்ணிடாதீங்க..! - TN Govt Entrepreneurship Training