திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் அருகே மன்னார்கோவில் கிராமத்தைச் சேர்ந்தவர் வள்ளியம்மாள் (63). இவருக்கு வெங்கடேசன் என்ற ஒரே ஒரு மகன் மட்டும் உள்ளார். கணவரை இழந்த நிலையில், வள்ளியம்மாள் தனது மகனுடன் மன்னார்கோவில் கிராமத்தில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், வள்ளியம்மாள் கடந்த 32 ஆண்டுகளாக நடிகர் விஜயின் தீவிர ரசிகையாக இருந்து வருகிறார். நடிகர் விஜயின் முதல் திரைப்படமான நாளைய தீர்ப்பு கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியானது. அப்படத்தை திரையில் பார்த்த வள்ளியம்மாள் அன்று முதல் விஜயின் நடிப்பை பிடித்து போய், அவரது ரசிகையாக மாறினார்.
தொடர்ந்து 1993 ஆம் ஆண்டு வெளியான செந்தூர பாண்டி படத்தில் நடிகர் விஜயகாந்த் உடன் விஜய் இணைந்து நடித்திருப்பார். அந்தப் படத்தையும் திரையில் பார்த்த வள்ளியம்மாள் விஜயின் தீவிர ரசிகையாக மாறத் தொடங்கியுள்ளார். தொடர்ந்து அன்று முதல் கடந்த 32 ஆண்டுகளாக விஜய் நடிப்பில் வெளியான திரைப்படங்களை ஒன்று விடாமல் திரையரங்கில் சென்று பார்த்து வந்துள்ளார்.
மகனாக மாறிய விஜய்: குறிப்பாக விஜயின் திரைப்படம் ஒரு திரையரங்கில் எத்தனை நாட்கள் ஓடுகிறதோ அதுவரை வாரம் தோறும் ஞாயிறு அன்று வள்ளியம்மாள் தவறாமல் அந்த படத்தை பார்த்து வருகிறாராம். விஜயின் நடிப்பு, நடனம், வசனம் என அனைத்தும் வள்ளியம்மாளை கவர்ந்துள்ளது. ஒவ்வொரு படத்திலும் விஜய்யை ரசித்து வந்த வள்ளியம்மாள் ஒரு கட்டத்தில் விஜயை தனது மகனாகவே பாவித்து வருகிறார்.
அதன்படி கடந்த பல ஆண்டுகளாகவே வள்ளியம்மாள் ஊருக்குள், தனக்கு விஜயுடன் சேர்த்து மொத்தம் இரண்டு மகன்கள் என்றும் அதில் நடிகர் விஜய் தான் எனக்கு மூத்த மகன் என்றும் கூறி வருகிறார். இதன் காரணமாகவே ஊருக்குள் வள்ளியம்மாள் பாட்டியை விஜய் வள்ளியம்மாள் என்று அழைத்து வருகின்றனர். விஜயின் நினைவாக வள்ளியம்மாள் பாட்டி வீட்டில் ஆங்காங்கே விஜய் நடித்த படங்களின் புகைப்படங்கள் மற்றும் விஜய் தனது மனைவியுடன் இருக்கும் படங்களை பிரேம் செய்து மாட்டியுள்ளார்.
போட்டுவுக்கு முத்தம்: அதேபோல் செய்தித்தாள்களில் விஜயின் புகைப்படம் இருந்தால், அதை பத்திரப்படுத்தி வைப்பதை வழக்கமாக வைத்துள்ளார். தனது வீட்டு பீரோவில் விஜயின் புகைப்படம் மற்றும் அவர் குறித்த செய்திகளை பத்திரப்படுத்தி வருகிறார். மேலும், தினமும் காலை எழுந்தவுடன் விஜயின் புகைப்படத்தை தொட்டு முத்தம் கொடுத்துவிட்டு தான் தனது அன்றாட பணிகளை செய்வாராம். அந்த அளவுக்கு விஜய் மீது தீராத அன்பை வள்ளியம்மாள் பாட்டி செலுத்தி வருகிறார்.
திருப்பதிக்கு வேண்டுதல்: எனவே, விஜயை பார்ப்பதற்கு பலமுறை வள்ளியம்மாள் முயற்சித்துள்ளார், ஆனால் அதற்கான வாய்ப்பு இன்னும் அவருக்கு அமையவில்லை. விஜயை ஒருமுறையாவது நேரில் சந்திக்க வேண்டும் என்பதுதான் வள்ளியம்மாள் பாட்டியின் வாழ்நாள் ஆசையாக இருந்து வருகிறது. மேலும், அந்த ஆசை நிறைவேறுவதற்காக திருப்பதி ஏழுமலையானை வேண்டி, உண்டியலில் பணம் சேர்த்து வருவதாகவும் வள்ளியம்மாள் பாட்டி நம்மிடம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மத்திய அரசை எதிர்க்கும் தீர்மானம்...தவெக செயற்குழு கூட்டத்தில் விஜய் அதிரடி!
பொதுவாக நடிகர் விஜய்க்கு இளம்பெண்கள் மற்றும் இளைஞர்கள் பட்டாளம் தான் அதிக அளவு ரசிகர்களாக உள்ளனர். இது போன்ற சூழலில் 63 வயது மூதாட்டி நடிகர் விஜயின் மிக தீவிர ரசிகையாக இருப்பது மட்டுமல்லாமல், விஜயை தனது மகனாக எண்ணி வாழ்ந்து வருவது ஊர் மக்களிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
தவெக நிர்வாகிகள்: மேலும், சினிமாவில் உச்சத்தில் இருந்தும் அந்த துறையை உதறிவிட்டு விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். அதுபோன்ற சூழலில் விஜய்க்கு வள்ளியம்மாள் போன்ற வயதானவர்கள் ஆதரவும் இருப்பது அவருக்கு அரசியலில் உத்வேகம் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. வள்ளியம்மாள் குறித்து அறிந்து கொண்ட அம்பாசமுத்திரம் தொகுதி தவெக நிர்வாகிகள் அவரை நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தார்கள்.
அவன் இவன்: இது குறித்து வள்ளியம்மாள் பாட்டி நம்மிடம் கூறும் போது, '' நடிகர் விஜய் தான் எனக்கு தலைமகன். செந்தூர பாண்டி படம் பார்த்தில் இருந்து, விஜயை பார்க்க வேண்டும் என்பது தான் எனது வாழ்நாள் ஆசை. விஜய் நினைவாக அவர் புகைப்படங்களை வீட்டில் வைத்துள்ளேன்.. தினமும் அவர் போட்டோவுக்கு முத்தம் கொடுப்பேன். கடைசியாக சர்க்கார் படத்தை தியேட்டருக்கு சென்று பார்த்தேன். நான் ஏழாம் வகுப்பு வரை படித்துள்ளேன்.. எனவே செய்தித் தாள்களில் விஜய் குறித்த தகவல்கள் வந்தால் ஆர்வமுடன் வாங்கி படிப்பேன். விஜய் வரலாறு புத்தகம் மூலம் அவர் பற்றிய அனைத்து விபரங்களையும் தெரிந்து வைத்துள்ளேன். விஜயை எனது மகனாக எண்ணுவதால் ''அவன் இவன்'' என்று தான் அழைப்பேன்.
சினிமாவை விட்டுவிட்டு நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது வருத்தம் தான்.. இருந்தாலும் அவர் முதல்வராகி அரசியல் வெற்றி பெற்று அனைத்து மக்களுக்கும் நல்லது செய்ய வேண்டும். முதல்வரோடு நின்று விடாமல் அவன் பிரதமராக வேண்டும் என்பது எனது ஆசை'' என்று தெரிவித்தார்.
சொத்தில் பங்கு: இதுகுறித்து வள்ளியம்மாள் பாட்டியின் மகன் வெங்கடேஷ் நம்மிடம் கூறும் போது, ''எனது அம்மாவுக்கு விஜயை ரொம்ப பிடிக்கும் நான் சின்ன பிள்ளையாக இருக்கும்போதே விஜய் பற்றி அடிக்கடி பேசுவார். என்னை அழைத்துக் கொண்டு விஜய் படம் பார்க்க செல்வார். விஜயை பார்க்க வேண்டும் என்பது மட்டும் தான் அவரது ஆசை. எனக்கும் விஜய் அண்ணன் தான்.. நான் இருக்கும் போது விஜயை மூத்த மகனாக எனது தாய் நினைப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. சொத்தில் பங்கு கேட்டால் கூட எனது அண்ணனுக்கு எழுதிக் கொடுத்து விடுவேன்.. சினிமாவைப் போல் அரசியலிலும் அவர் வெற்றி பெற வேண்டும்'' என்றார்.
இது குறித்து பக்கத்து வீட்டுப் பெண் தங்க மாரியம்மாள் நம்மிடம் கூறும் போது, '' வள்ளியம்மாள் பாட்டி எங்களிடம் அடிக்கடி நடிகர் விஜயைப் பற்றி பேசுவார்.. நடிகர் விஜயின் நடிப்பு அவரது நடவடிக்கைகள் செயல்பாடு அனைத்தும் பிடித்திருப்பதாக கூறுவார். பொதுவாக நாம் விஜயை அண்ணன், தளபதி என்று கூறுவோம். ஆனால், அவரை தனது மகன் என்று அழைப்பதில் வள்ளியம்மாள் பாட்டிக்கு ஒருவித சந்தோசம் ஏற்படுகிறது, எனவே தான் மகனாக எண்ணி வருகிறார். இதுவரை விஜய் சினிமாவில் ஹீரோவாக நடித்தார். இனி அரசியலில் அவர் மக்களுக்கு நல்லது செய்வார் என்று எதிர்பார்க்கிறோம்'' என்றார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்