ஈரோடு: ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணை கொடிவேரி. இங்கு ஈரோடு மட்டுமின்றி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வருவது வழக்கம். அந்தவகையில், இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கொடிவேரி அணைக்கு வந்திருந்தனர்.
இந்த நிலையில், கொடிவேரி பகுதியில் நீண்ட நேரம் தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதனைக் கண்ட மக்கள் சிறுவனை மீட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறியுள்ளனர்.
இதனை அடுத்து, இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கடத்தூர் போலீசார், சிறுவனின் உடலை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சிறுவன் குறித்த தகவல் சேகரித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், சிறுவன் திருப்பூர் மாவட்டம் புது ஊஞ்சல் பாளையத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் கற்பகம் தம்பதியின் மகன் வாசு (13) என்பது தெரிய வந்துள்ளது.
மேலும், நேற்று நண்பர்களுடன் வெளியே சென்ற சிறுவன் வீடு திரும்பவில்லை என்றும், அவனது பெற்றோர் சிறுவனைத் தேடி வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், காணாமல் போன சிறுவன் கொடிவேரி அணைக்கு எப்படி வந்தார் என்பது குறித்து கடத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தென்பெண்ணை ஆற்றில் கவிழ்ந்த கார்.. நீச்சல் அடித்தே உயிர் தப்பிய நிகழ்வு!