திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலைப் பகுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக வந்த தகவலின் அடிப்படையில் நடந்த அதிரடி சோதனையில், ஹோட்டல் மேலாளர்கள் உட்பட 9 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூரில் சுற்றுலாத் தளமான ஏலகிரி மலையில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் ஹோட்டல்களில் உள்ளூர் மற்றும் வெளியூர் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருவதாகத் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பெயரில் திருப்பத்தூர் டிஎஸ்பி ஜெகநாதன் அதிரடியாக ஏலகிரி மலையில் உள்ள 10க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகளில் சோதனை மேற்கொண்டார். அப்போது பி.எச் மற்றும் ஆர்யா ஹோட்டல், சாண்டல்வுட் ரெசிடென்சி உள்ளிட்ட 3 தனியார் விடுதிகளில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 5 பெண்கள் மற்றும் ஹோட்டல் மேலாளர்கள் உள்ளிட்ட 14 பேரை போலீசார் கைது செய்து ஏலகிரி மலை காவல் நிலையம் அழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: கொலை வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டாஸ்: திருப்பத்தூர் ஆட்சியர் நடவடிக்கை!
கைது செய்யப்பட்டவர்களின் விவரம்: சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த இந்திர சேனன்(43), நாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன்(42), சௌந்தர ராஜன்(42), ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியைச் சேர்ந்த மணி(36), கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியைச் சேர்ந்த பார்த்திபன்(34), ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி பகுதியைச் சேர்ந்த தனியார் விடுதி மேலாளர் சென்ராயன்(42), திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ்(32), வாணியம்பாடி அடுத்த ராமநாயக்கன் பேட்டை பகுதியைச் சேர்ந்த தனியார் விடுதி மேலாளர் சூர்யா(28), ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜீவ்(37).
மேற்கண்ட 9 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், ஐந்து பெண்களை மட்டும் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்