நீலகிரி: கோடை விழா ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் குன்னூர் சிம்ஸ் பூங்காவின் 64வது பழக்கண்காட்சியை, இன்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா துவக்கி வைத்தார். இந்த ஆண்டு சிம்ஸ் பூங்காவின் பழக்கண்காட்சி மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ளது.
இதில் பழவகைகளான திராட்சை, எலுமிச்சை, ஆரஞ்சு, பைனாப்பிள், மாம்பழம் என பிரமாண்டமான வடிவில் கொரில்லா, வாத்து, பிக்காசோ, டோரா புஜ்ஜி, மினிஷா போன்ற வடிவங்கள் செய்யப்பட்டு காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. அதேபோல், 300 கிலோ எடை கொண்டு பேரிச்சம்பழம், திராட்சை, ஸ்டாராபெர்ரி போன்ற பழங்களால் நத்தை உருவாக்கப்பட்டுள்ளது. இதே போல் 150 கிலோ பழங்களால் ”150” என வடிவமைத்து சிம்ஸ் பூங்காவில் 150 ஆண்டுகால பழமையை நினைவு கூறுகிறது.
சிம்ஸ் பூங்காவின் பழமை: நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதியில் உள்ள சிம்ஸ் பூங்கா 150 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இது ஆங்கிலேயரால் துவங்கப்பட்ட இயற்கை பூங்காவாகும். இங்கு ஏராளமான மருத்துவ குணம் கொண்ட செடி கொடிகள், வான் உயர்ந்த மரங்கள், பசுமை மிகுந்த புல்தரைகள் இருப்பது பூங்காவின் சிறப்பு அம்சமாகும்.
கண்காட்சி நடைபெறும் தேதிகள்: இந்த கண்காட்சி மே 24-ஆம் தேதி முதல் மே 26 வரை நடை பெற உள்ளது. சுற்றுலாவிற்கு வரும் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருப்பதால், கண்காட்சிக்கும் அதிக பேர் வருகை தர வாய்ப்பு உள்ளது என தோட்டகலை துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: காரையாறு சாலையில் ஹாயாக நடந்து சென்ற சிறுத்தை.. வைரலாகும் வீடியோ!