தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கிரேட் காட்டன் ரோடு பழைய தொழிற்பேட்டை அருகே, நேற்று நள்ளிரவு 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டு கிடப்பதாக மத்திய பாகம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்ராஜ் தலைமையிலான போலீசார், அப்பகுதிக்கு விரைந்து சென்று பார்த்தனர்.
அப்போது கொலை செய்யப்பட்டவர் கழுத்து உள்ளிட்ட உடலில் அரிவாளால் வெட்டப்பட்டு, தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். பின்னர், சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டது தூத்துக்குடி குருஸ்புரத்தைச் சேர்ந்த முன்னாள் குமாஸ்தாவும், தற்போது நிலத் தரகராகவும் இருந்து வந்த பால்ராஜ் (60) என்பது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்வதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு தலைமையிலான போலீசார், அவர்களை தூத்துக்குடி நெல்லை பைபாஸ் சாலையில் நள்ளிரவுக்குப் பின் அதிகாலை வேளையில் போலீஸ் வாகனத்தில் விரட்டியுள்ளனர். சினிமா காட்சி போல இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை போலீசார் பின் தொடர்ந்து நீண்ட நேரம் விரட்டிச் சென்று மடக்கி பிடித்துள்ளனர்.
இதில், போலீசார் தங்களை விரட்டி வருவதை அறிந்து அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் சாலையில் சறுக்கி விழுந்ததில் அவர்களுக்கு கை முறிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி முத்து கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த கந்த சுப்பிரமணியன் மற்றும் தூத்துக்குடியில் வசித்து வரும் மதுரையைச் சேர்ந்த ஜெயராம் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், இவர்கள் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் பால்ராஜை அரிவாளால் வெட்டி கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர். இந்நிலையில், இந்தக் கொலையில் இவர்கள் இருவரை தவிர வேறு யாருக்கும் தொடர்பு உண்டா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகம்..2 குழந்தைகளை கொடூரமாக கொன்ற தந்தை தற்கொலை!