கரூர்: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டி பொன் நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில் இளம்பெண்ணை, இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு கரூர் பள்ளப்பட்டி சாலையில் சென்றபோது அவரை வழிமறித்த அன்வர் பாட்ஷா(55) என்ற நபர், இளைஞரைக் கடுமையாகத் தாக்கியுள்ளார்.
மேலும் ஜாதி பெயரைச் சொல்லி தகாத வார்த்தைகளால் இளைஞரை திட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரது மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அன்வர் பாட்ஷா மீது வழக்குப் பதிவு செய்த அரவக்குறிச்சி போலீசார் அவரை கைது செய்தனர்.
அவர் மீது பொதுவெளியில் சென்றவரை வலுக்கட்டாயமாகத் தடுத்து நிறுத்தி கொலை மிரட்டல் விடுத்துத் தாக்கியது, சாதி பெயரைச் சொல்லித் திட்டி தாக்கியது உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், அன்வர் பாஷா, இந்த சம்பவத்தில் தொடர்புடைய இளம்பெண்ணின் தந்தைக்கு நண்பர் என தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அரவக்குறிச்சி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிபதி சந்தோசம் முன்பு அன்வர் பாட்ஷா ஆஜர்படுத்தப்பட்ட போது, சம்பவம் தொடர்பாக அவர் மன்னிப்பு கேட்டதாக பாதிக்கப்பட்ட இளைஞரின் குடும்பத்தார் நேரில் ஆஜராகி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், விசாரணை தேவைப்படும் பட்சத்தில் உடனடியாக ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீனில் அன்வர் பாட்சா விடுவிக்கப்பட்டார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: திருப்பத்தூரை அதிர வைக்கும் ஜிஎஸ்டி மோசடி.. சாமானிய மக்களை குறிவைக்கும் கும்பலின் பின்னணி என்ன?