சென்னை: ராட் வீலர் நாய் கடித்த 5 வயதுக் குழந்தைக்குச் சென்னை அப்போலோ மருத்துவமனையில் தலையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டு இருப்பதாக மருத்துவமனை தரப்பிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவில் மே 5ஆம் தேதி இரண்டு ராட் வீலர் நாய்கள் 5 வயது சிறுமியைக் கடித்தது. மேலும், காப்பாற்ற முயன்ற குழந்தையின் தாயை நாய் கடித்துள்ளது. இதில், இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ராட் விலர் நாய் கடித்த சிறுமி முதலில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன் பின்னர் குழந்தையை அப்போலோ மருத்துவமனைக்கு 6ஆம் தேதி அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், 3 நாட்களாக மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்தார். இதனையடுத்து குழந்தைக்கு அப்போலோ மருத்துவமனையின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்வதற்குத் திட்டமிட்டனர்.
அதன்படி, ஆயிரம் விளக்கு பகுதியில் அப்போலோ மருத்துவர்கள் இன்று மதியம் 2 மணி நேரம் பிளாஸ்டிக் சர்ஜரி அறுவை சிகிச்சை செய்ததாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பின்னர் குழந்தை தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் வைத்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. குழந்தைக்கு ராபீஸ் நோய் தாக்குதல் வராமல் பாதுகாக்கப்பட்டு, சிகிச்சை முடிந்துள்ளதாகவும், ஒரு வாரம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறவும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்து; 8 பேர் உயிரிழப்பு! - Sengamalapatti Fire Accident