திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல் நத்தம் அருகே உள்ள வாலுர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக்(24), இவர் 4 நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் பகுதியில் சீட்டுப் பணம் கொடுப்பதற்காகத் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது பச்சூர் அருகே ஒரு நபர் கார்த்திக் வாகனத்தை நிறுத்தி லிப்ட் கேட்டுள்ளார்.
கார்த்திக்கும் செல்லும் வழிதானே என லிப்ட் கொடுத்துள்ளார். தொடர்ந்து அந்த நபர் வாகனத்தை கோமுட்டியூர் என்ற இடத்தில் நிறுத்தும்படி கூறியுள்ளார். வாகனத்தை நிறுத்தியபோது, அங்கு மறைந்திருந்த 3 நபர்கள் மற்றும் லிப்ட் கேட்டு வந்த ஒருவர் என 4 பேரும் சேர்ந்து கார்த்திகை மிரட்டி அவரிடம் கழுத்தில் இருந்த ஒன்றரை சவரன் தங்க செயின், அரை சவரன் மோதிரம், ரூ.10 ஆயிரம் பணம் மற்றும் செல்போன் என அனைத்தையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
பின்னர் இந்த வழிப்பறி சம்பவம் குறித்து கார்த்திக் நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலிசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் கோமுட்டியூர் பகுதியைச் சேர்ந்த அரவிந்தன்(19) என்ற இளைஞர் மற்றும் 4 சிறுவர்கள் உட்பட 5 பேரை நாட்றம்பள்ளி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது இந்த 5 பேரும் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து அந்த 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 2 சவரன் தங்க நகைகள், 10 ஆயிரம் பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.