சென்னை: சென்னை, தாம்பரம்- கோடம்பாக்கம் ரயில்வே மார்க்கத்தில் தண்டவாளம் பராமரிப்பு பணிகள் நேற்று (மார்ச் 3) நடைபெற்றதால், தொடர்ந்து நான்காவது வாரமாக சென்னை கடற்கரை, செங்கல்பட்டு என இரு மார்க்கத்திலும் புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
காலை 10:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை ரயில்வே தண்டவாளங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றதால் சென்னை கடற்கரை, செங்கல்பட்டு இடையே இரு மார்க்கத்திலும் சுமார் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டது.
இதனையடுத்து பொதுமக்கள் வசதிக்காக மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பாக கூடுதல் பேருந்துகள் இயக்கவும், மெட்ரோ ரயில்கள் கூடுதலாக இயக்கவும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு ரயில்வே நிர்வாகம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. இதன் காரணமாகத் தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் உள்ளிட்ட புறநகர் பேருந்து நிலையங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் குவிந்தனர். இதனால், அனைத்து மாநகர பேருந்துகளும் நிரம்பி வழிந்தன.
வழக்கத்தை விட, அதிக அளவிலான பொதுமக்கள் தாம்பரம் பேருந்து நிலையத்தில் குவிந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து போக்குவரத்து போலீசார், போக்குவரத்து சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது களப்பணியாற்றிய ரசிகர்களுக்கு விருந்தளித்த நடிகர் சூர்யா!