ராணிப்பேட்டை: அரக்கோணம் அருகே 4 வயது ஆண் குழந்தையை வெறி நாய் கடித்து, ரேபிஸ் நோய் தாக்கியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், குழந்தையின் உடலை வீட்டிற்கு கூட எடுத்து வராமல் நேரடியாக மயானத்திற்கு எடுத்துச்சென்று இறுதிச்சடங்கு செய்த சம்பவம் அப்பகுதி கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கணபதிபுரத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வரும் இவருக்கு 4 வயதில் நிர்மல் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், நிர்மல் கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி வீட்டின் அருகே குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அதே தெருவில் ஓடி வந்த வெறி நாய் ஒன்று சிறுவனைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
அப்போது, வெறி நாய் சிறுவனின் முகம், தாடை உள்ளிட்ட பகுதிகளில் கடித்துக் குதறியுள்ளது. அதனால், ரத்தம் வழிந்து வலி தாங்க முடியாமல் நிர்மல் அலறி துடித்துள்ளான். அந்த சத்தம் கேட்டு, வீட்டில் இருந்தவர்கள் ஓடிச் சென்று நாயை விரட்டியுள்ளனர். பின்னர், சிறுவனை மீட்ட பெற்றோர், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு மருத்துவர்கள் சிறுவனை பரிசோதித்ததில், சிறுவனுக்கு ரேபிஸ் நோய் தாக்கியிருப்பது தெரியவந்துள்ளது. அதைத் தொடர்ந்து, ரேபிஸ் நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நோயின் தாக்கம் தீவிரமடைந்ததால், சிறுவன் நிர்மல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
மேலும், செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் ரேபிஸ் நோய் தாக்கி சிறுவன் இறந்ததாக தகவல் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, சிறுவனின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்லாமல், அமரர் ஊர்தி மூலமாக நேரடியாக சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்ற பெற்றோர்கள் இறுதிச் சடங்குகளை செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்