சென்னை: மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையமான லயோலா கல்லூரியில் 4 அடுக்கு பாதுகாப்புடன் போடப்பட்டுள்ளது. மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியைப் பொருத்தவரை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, துறைமுகம், எழும்பூர், அண்ணாநகர், வில்லிவாக்கம் ஆகிய சட்டமன்ற தொபுதியை உள்ளடக்கியதாகும். திமுக கட்சி சார்பில் தயாநிதிமாறனும், அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிகவின் பார்த்தசாரதியும், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகேயனும், பாஜக சார்பில் வினோஜ் செல்வம் ஆகியோருக்கு இடையே போட்டி நடைப்பெற்றது.
இந்த நிலையில், ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு முடிந்து மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் வேட்பாளர்களின் ஏஜென்டுகள் முன்னிலையில் மூடி சீல் வைக்கப்பட்டன. வாக்கு எண்ணிக்கை மையங்களில் 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல் அடுக்கில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து அறை முன்பு துப்பாக்கி ஏந்திய மத்திய போலீஸ் படையினரும், 2வது அடுக்கில் தமிழக சிறப்பு காவல்படை போலீசாரும் பணியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
3வது அடுக்கில் ஆயுதப்படை போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். 4வது அடுக்கில் அதாவது வாக்குப்பதிவு மையத்தின் நுழைவாயிலில் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும், 1500 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. சிசிடிவி கேமராக்களை கட்டுப்பாட்டு அறையில் இருந்து அதிகாரிகள் கவனிக்கலாம்.
அதேபோல, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியும் இவற்றை கண்காணிக்கலாம். வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் பாதுகாப்பு பணியில் உள்ள போலீசாரை தவிர, மற்ற யாரும் உள்ளே செல்ல அனுமதி இல்லை. வேட்பாளர்களின் முகவர்களுக்கும் உள்ளே செல்ல அனுமதி இல்லை. அவர்கள் 24 மணி நேரமும் உள்ளே என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். ஆனால், அவர்கள் யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடக்கிறது. இதற்கு 42 நாட்கள் உள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: "காவல் மரணங்கள் குறித்த திரைப்படங்கள் பார்த்துவிட்டு நீலிக்கண்ணீர் வடிக்கும் முதலமைச்சர்" - ஈபிஎஸ் தாக்கு! - Edappadi Palaniswami