சென்னை: கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி சென்னை அடுத்த தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் நவீன், சதீஷ், பெருமாள் ஆகிய மூன்று பேரிடம் இருந்து ரூ.4 கோடியை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மூன்று பேரையும் கைது செய்து தாம்பரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த பணம் நெல்லை நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் எனவும், அவரது ஹோட்டலில் இருந்து இவைத் தேர்தல் செலவுக்காக சென்ன்னையின் பல இடங்களில் இருந்து கைமாறி கொண்டு செல்லப்படுவதாகவும் வாக்குமூலம் அளித்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கின் தீவிர தன்மையை கருத்தில் கொண்டு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. பின்னர், சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கின் ஆவணங்களைப் பெற்ற பின்பு, இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். மேலும், அவர்கள் அளிக்கும் வாக்குமூலங்களை வீடியோவாக பதிவாக செய்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இது தொடர்பாக, சில இடங்களில் சோதனை நடத்தியதில் முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர். இதுவரை இதில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த நவீன், சதீஷ், பெருமாள் உட்பட 15-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி நேரில் வரவழைக்கப்பட்டு இந்த பணம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விசாரணைகள் யாவும் வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவர்கள் அளித்துள்ள வாக்குமூலங்களை அடிப்படையாக வைத்து தற்போது, நெல்லை நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், தமிழ்நாடு பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், பாஜக தொழில் பிரிவு நிர்வாகி கோவர்தன் மற்றும் நயினார் நாகேந்திரனின் உதவியாளர் மணிகண்டன் ஆகிய 4 பேரிடமும் விசாரணை நடத்த இன்று சென்னை எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இவர்கள் அளிக்கும் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த வழக்கில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டு இருந்தனர்.
இந்த நிலையில், நயினார் நாகேந்திரன் உட்பட 4 பேரும் சிபிசிஐடி அதிகாரிகளின் விசாரணைக்கு ஆஜராகாமல் ஜூன் நான்காம் தேதிக்கு பிறகு தேர்தல் முடிவுகள் வந்த பிறகு, விசாரணைக்கு ஆஜராகி உரிய விளக்கங்கள் அளிப்பதாக அவர்களின் வழக்கறிஞர்கள் மூலம் சிபிசிஐடி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து இது குறித்து சிபிசிஐடி போலீசார் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: நயினார் நாகேந்திரனுக்கு சிபிசிஐடி சம்மன்! - NAINAR NAGENDRAN CASE