கோயம்புத்தூர்: கோவில்பாளையம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவர்களான வெற்றிவேல், பிரவீன் ஆகிய இருவருக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்ததாக தெரிகிறது. இதில் பிரவீனுக்கு ஆதரவாக அந்த கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவரான தீபக், ரவுடி ரவீந்திரா மற்றும் 16 வயது சிறுவன் உள்ளிட்ட 9 பேர் சேர்ந்து வெற்றிவேல் தங்கி இருந்த அறைக்குள் நுழைந்து, அங்கிருந்த இருசக்கர வாகனம் உட்படப் பொருட்களைத் திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக கோவில்பாளையம் காவல் நிலையத்தில் கடந்த ஜூன் மாதம் 24 ம் தேதி வெற்றிவேல் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலிசார் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதில் பிரதீப், தீபக், ராகேஷ், சந்தோஷ், ராகுல் மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய 6 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆனால், இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய ரவுடி ரவீந்தரா, நந்தகுமார் மற்றும் சிராஜுதீன் ஆகிய மூன்று பேர் தலைமறைவாகினர். இதனை தொடர்ந்து 3 பேரையும் தேட தனிப்படை அமைக்கப்பட்டு கோவில்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் அந்த மூன்று பேரும் இமாச்சல பிரதேச மாநிலம், சிம்லாவில் தலைமறைவாக இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் சிம்லா சென்று கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி மூன்று பேரையும் கைது செய்தனர்.
அதைத் தொடர்ந்து, அவர்களை சிம்லா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின் கோவை அழைத்து வந்தனர். தொடர்ந்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கொள்ளை அடிக்க பயன்படுத்திய பொருட்கள் கோவில்பாளையம் பகுதியில் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து ரவீந்திரா மற்றும் நந்தகுமார் ஆகிய இருவரை மட்டும் அந்தப் பகுதிக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அப்பொழுது அவர்கள் இருவரும் போலீசாரிடமிருந்து தப்ப முயன்றதாகவும், அப்போது அருகில் இருந்த பள்ளத்தில் குதித்த நிலையில் இருவருக்கும் கால் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் இருவரையும் அனுமதித்த போலீசார் அவர்களுக்கு சிகிச்சை அளித்ததுடன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் சிராஜூதீன் கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். கால் உடைந்த நிலையில் ரவுடிகள் நந்தகுமார் மற்றும் ரவீந்திரா ஆகிய இருவருக்கும் கோவை அரசு மருத்துவமனையில் உள்ள சிறை கைதிகளுக்கான வார்டில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: அடுக்கடுக்காக குவிந்த கந்து வட்டி புகார்.. கரூரில் திமுக பிரமுகர் அதிரடி கைது!