மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கதிராமங்கலம், பெரிய தெருவைச் சேர்ந்த ரமேஷ் மகன் மணிகண்டன்(22). இவர் டெம்போ ஓட்டுநராக வேலை செய்து வந்துள்ளார். அதேபோல, சீர்காழி அருகே உள்ள பூம்புகார் அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருபவர் நீலமேகன் மகன் ஜெயசீலன்(19).
இவர்கள் இருவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் கதிராமங்கலம் கிராமத்தில் இருந்து, கன்னியாகுடி சாலை வழியாக மயிலாடுதுறைக்குச் சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது, மயிலாடுதுறை நோக்கி திருநன்றியூர் ஆலவெளி பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமன் என்பவரும் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.
அப்போது, நெல்வேலியிலிருந்து மயிலாடுதுறை நோக்கி அதிவேகமாக வந்த தனியார் பேருந்து ஒன்று 2 பைக்குகள் மீதும் மோதியுள்ளது. அதனைத் தொடர்ந்து பைக்கில் வந்த 3 பேர் மீதும் தனியார் பேருந்து ஏறி இறங்கியுள்ளது. இந்த கோரவிபத்தில் 3 இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பின்னர், அப்பகுதியில் இருந்த நபர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த வைத்தீஸ்வரன் கோவில் போலீசார், விபத்தில் உயிரிழந்த 3 பேரின் உடலையும் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டர். அப்போது, விபத்தை ஏற்படுத்தி விட்டு தனியார் பேருந்து ஓட்டுநர் தப்பிச் சென்றது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து, இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பிச் சென்ற தனியார் பேருந்து ஓட்டுநர் தீவிரமாக தேடி வருகின்றனர். தற்போது, பைக்கில் சென்ற இளைஞர்கள் தனியார் பேருந்து மோதிய விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: சீமானுக்கு வருத்தக் கடிதம் எழுதிய சிவராமன்.. மரணத்தில் என்ன சொல்கிறது நாதக?