திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அசோக் நகரைச் சேர்ந்தவர்கள் தினகரன் (வயது 20), பாலாஜி (19), பிரவீன் (19). நண்பர்களான இவர்கள் மூவரும் வெவ்வேறு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தனர். இவர்கள் மூவரும், இன்று இருசக்கர வாகனத்தில் சாணார்பட்டி அருகே நடந்த கபடி போட்டிக்கு சென்று வீட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
திண்டுக்கல்- நத்தம் சாலையில் உள்ள ஜூஸ் தொழிற்சாலை அருகே சென்றபோது எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீது இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் பாலாஜி, பிரவீன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த தினகரன் உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து சாணார்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மெரினாவில் கொண்டாட்டம்; மருத்துவமையில் சோகம்! கடும் நெரிசல் சிக்கி 4 பேர் மரணம்!
பொதுமக்கள் மறியல் : இந்த நிலையில் ஜூஸ் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் லாரிகள் அதிவேகமாக வருவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாக குற்றம் சாட்டி, அப்பகுதி மக்கள் விபத்து நடந்த பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த நத்தம் காவல் ஆய்வாளர் தங்கமுனியசாமி தலைமையிலான போலீஸார் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்