சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான மாமல்லபுரம் ஐந்துரதம் புராதனச் சின்னம் அருகில், நேற்று நோ பார்க்கிங் வழியாக கார் ஒன்று சென்றுள்ளது. அதில் 2 பெண்கள், ஒரு சிறுவன் உட்பட 5 நபர்கள் இருந்துள்ளனர்.
அப்போது, தனியார் வணிக வளாக வாகன நிறுத்துமிட காவலாளி ஏழுமலை (49) என்பவர், அந்த காரை மடக்கி, அங்குள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்துமாறும், நோ என்ட்ரி வழியாக கார் செல்லக்கூடாது என்று சொன்னதாகவும் கூறப்படுகிறது. அப்போது, அந்த செக்யூரிட்டியை இடிப்பது போன்று, அவரின் சொல்லை மீறி அந்த கார் நோ எனட்ரியில் செல்ல முயன்றுள்ளது.
அதற்காக, காரில் வந்தவர்களை செக்யூரிட்டி ஏழுமலை திட்டியதாகவும், அதனால் ஆத்திரமடைந்து உடனே காரில் இருந்து இறங்கிய 2 பெண்களும், "ஏய் யாரை திட்டுகிறாய்" என ஆவேசமடைந்து, ஏழுமலையை சரமாரியாக தாக்கியுள்ளனர். அதனைத் தொடர்ந்து, உடன் வந்த மற்ற ஒரு ஆண் நபரும் சேர்ந்து செக்யூரிட்டியைத் தாக்கியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: தொடரும் வெடிகுண்டு மிரட்டல்.. விமான நிலையங்களில் நடப்பது என்ன?
அதன் பிறகு, அவ்வழியாகச் சென்றவர்கள் 4 பேரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், செக்யூரிட்டியை அவர்கள் தாக்கியதை, அங்கிருந்த சுற்றுலாப் பயணி ஒருவர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது தாக்குதல் தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக வைரலானதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் தொடர்பாக, மாமல்லபுரம் போலீசார் 2 தனிப்படை அமைத்துத் தேடி வந்தனர்.
இந்த நிலையில் காவலாளியைத் தாக்கிய 3 பேரையும் இன்று அதிகாலை தாம்பரம் அருகே வைத்து கைது செய்த போலீசார், அவர்கள் மீது காரில் பதிவு எண் இல்லாத நிலையில் வாகனத்தை இயக்கியதாகவும், பொதுமக்கள் கூடும் இடத்தில் வன்முறை தூண்டும் வகையில் செயல்பட்டதாகவும், உலகப் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளத்திற்கு அவப்பெயர் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாகவும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதையடுத்து 3 பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ததில், அவர்கள் முடிச்சூரைச் சேர்ந்த பிரபு இன்பதாஸ், சண்முகப்பிரியா, கீர்த்தனா என்பது தெரியவந்துள்ளது. அதைத் தொடர்ந்து போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்