தேனி: தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ளது மேகமலை. தேனியின் மிகவும் புகழ் பெற்ற சுற்றுலா ஸ்தலமாக இந்த மேகமலை விளங்கி வருகிறது. இந்த மேகமலை இருக்கக்கூடிய ஹைவேஸ் பேரூராட்சிக்கு உட்பட்டு ஏழு மலை கிராமங்கள் உள்ளன.
இங்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த மேகமலைக்கு சின்னமனூரில் செல்லும் வழியில் மலை அடிவாரத்தில் தென்பழனியில் வனத்துறையின் சோதனைச் சாவடி உள்ளது.
பாதுகாக்கப்பட்ட ஒரு வனப்பகுதியான இங்கு காட்டெருமை, யானை, புலி போன்ற பல்வேறு விலங்குகள் உள்ளன. மேகமலைக்கு செல்லும் சாலையில் மாலை நேரத்தில் வனவிலங்குகளின் நடமாட்டம் இருக்கும் என்பதால் மாலை 6 மணிக்கு மேல் சுற்றுலா பயணிகள் யாரும் மலையேற அனுமதிக்கப்படுவதில்லை.
இந்நிலையில், நேற்று இரவு தேனி முத்துதேவன்பட்டி பகுதியைச் சார்ந்த சதீஷ்குமார் என்பரின் தலைமையில் செல்வம், சிவா உள்ளிட்ட 7 நபர்கள் ஒரு காரில் இரவு மேகமலைக்கு செல்வதற்காக வந்துள்ளனர். அப்போது தென்பழனி சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் வனக்காவலர் காசி என்பவர் இருந்துள்ளார். அவருடன் உதவியாக வனத்துறையில் உள்ள சரண்குமார் என்பவரும் இருந்துள்ளார்.
அப்போது இரவு பதினோரு மணிக்கு மேல் ஆனதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் மலைச்சாலையில் செல்வதற்கு அனுமதி இல்லை என வனத்துறையினர் கூறியுள்ளனர். ஆனால், சதீஷ்குமார் மற்றும் காரில் வந்த நண்பர்கள் வனத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து அங்கிருந்து செல்லாமல் சோதனைச் சாவடியின் பின்புறம் கூடி இரு நபர்கள் அத்துமீறி உள்ளே செல்ல முற்பட்டுள்ளனர்.
இதனை கண்ட வனக்காவலர் காசி சத்தமிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் காசி கையில் வைத்திருந்த கம்பை பிடுங்கி அவரை சரமாரியாக தாக்கி உள்ளனர். காரில் வந்தவர்கள் மது போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதீத மதுபோதையில் இருந்ததால் அவர்கள் வன காவலர் காசி மற்றும் சரண்குமார் ஆகிய இருவரையும் தாக்கியுள்ளனர். இதில் காசிக்கு பலத்த ரத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஓடைப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு விரைந்து வந்த காவல்துறையினர் சதீஷ்குமார், செல்வம், சிவா ஆகிய 3 நபர்களை பிடித்தனர். மேலும் 4 நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். காயமடைந்த காசி சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பிடிபட்ட 3 நபர்களை ஓடைப்பட்டி காவல் நிலையத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், சதீஷ்குமார் என்பவர் போலி பத்திரிக்கை நிருபர் என்பது தெரியவந்தது. போலி நிருபர் சதிஷ்குமார் மற்றும் 6 பேர் அடங்கிய கும்பல் அத்துமீறி சோதனைச் சாவடியை கடந்து செல்ல காரில் சென்றதாகவும், வன காவலர் காசி அனுமதி மறுத்ததால் காரை வேறு இடத்தில் நிறுத்திவிட்டு வந்த ஆறு பேர் சோதனைச் சாவடியை கடந்து வனவிலங்குகள் நடமாடும் பகுதிக்கு அத்துமீறி சென்றதாகவும், இதனால் பின்னால் சென்ற காசியை தாக்கி ரத்தக் காயம் ஏற்படுத்தியதாகவும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் தப்பியோடிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: ராமேஸ்வரம் கோயிலில் பீகார் பக்தர் மீது பணியாளர்கள் தாக்குதல் என புகார்