சென்னை: இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் (ஐஇசி) சட்டங்களுக்கு மாற்றாக, பாரதிய சாக்ஷியா, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா என்ற பெயரில் மூன்று புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, அவை ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.
இந்த சட்டங்களுக்கு இந்தி மற்றும் சமஸ்கிருதத்தில் பெயர் சூட்டப்பட்டுள்ளது. எனவே இந்த சட்டங்களை அரசியல் சட்டத்துக்கு விரோதமானவை என அறிவிக்கக் கோரி, தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
அவர் தனது மனுவில், "நாட்டில் உள்ள 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களில் ஒன்பது மாநிலங்களிலும், இரு யூனியன் பிரதேசங்களிலும் மட்டும்தான் இந்தி அலுவல் மொழியாக உள்ளது. மொத்த மக்கள்தொகையில், 43.63 சதவீதம் மக்கள் மட்டுமே இந்தியை தாய்மொழியாகக் கொண்டவர்களாக உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும். வேறு மொழிகளில் சட்டம் இயற்ற நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகளுக்கு எதிராக இந்தியில் பெயரிடப்பட்டுள்ள மூன்று சட்டங்களையும் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என அறிவித்து, ஆங்கிலத்தில் பெயர் வைக்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், மூன்று சட்டங்களும் ஆங்கிலத்தில் தான் நிறைவேற்றப்பட்டன எனவும், சட்டங்களின் பெயர்கள்கூட ஆங்கில எழுத்துக்களில்தான் இடம்பெற்றுள்ளன என்றும் விளக்கினார்.
மேலும் இந்த சட்டங்கள், அரசியலமைப்பு சட்ட விதிகளை மீறவில்லை எனவும், எவரின் அடிப்படை உரிமையும் இதனால் பாதிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டார். சட்டங்களுக்கு பெயர் சூட்டும் விவகாரம் என்பது நாடாளுமன்றத்தின் விருப்பம் எனவும், இதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் விளக்கமளித்தார்.
இதையடுத்து, மூன்று சட்டங்களையும் அமல்படுத்தத் தடை விதிக்கக் கோரிய இடைக்கால கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், மனுவுக்கு ஜூலை 23ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: ஹத்ராஸ் சம்பவத்தில் பலி எண்ணிக்கை 121 ஆக உயர்வு.. தப்பியோடிய போலே பாபா-வை பிடிக்க தனிப்படை!