சென்னை: நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதியை நேற்றைய முன்தினம் (மார்ச் 16) இந்தியத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அந்த வகையில், தமிழ்நாட்டிற்கு ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் தேர்தல் முடிவுகள் ஜூன் மாதம் 4ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்றைய முன்தினம் (மார்ச் 16) மாலை 3 மணி முதல், தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாகத் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிரமாகச் சோதனைகள் மற்றும் வாகன தனிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் அடிப்படையில், ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு 3 பறக்கும் படை என்ற கணக்கில் தமிழ்நாடு முழுவதுமாக 702 பறக்கும் படைகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், சென்னை யானைக்கவுனி பகுதியில் நேற்று முன்தினம் (மார்ச் 16) தேர்தல் பறக்கும் படையின் சோதனையின்போது 1 கோடியே 43 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல், கடலூர் மாவட்டம் வேப்பூரில் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் நாகையில் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன. ஆவடியில் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள்கள் பிடிபட்டது. இதுமட்டும் அல்லாது 26 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் மற்றும் 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் போன்ற விலை உயர்ந்த உலோகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேற் கூறிய பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் மற்றும் பொருட்களின் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் இன்று காலை வரையில் 3 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: சென்னைக்கு அழைத்து வரப்பட்ட ஜாபர் சாதிக்கிடம் 12 மணிநேரமாக விசாரணை...