நெல்லை: திருநெல்வேலி மாவட்டம், சிவந்திப்பட்டி பற்பநாதபுரத்தை சேர்ந்த வேல்சாமி மகன் ஐயப்பன் (எ) சுரேஷ்(வயது31). இவர் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் உள்ள ஒரு செங்கல் சூளையில் வேலை செய்து வந்தார். இவர் கடந்த 10.02.2024 அன்று செய்துங்கநல்லூர் அருகே அய்யனார்குளம்பட்டி சுடுகாடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்ததில் திருநெல்வேலி மாவட்டம் சிவந்திப்பட்டி பற்பநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர்களான அன்பு (எ) அன்பன்(வயது 24), மஜ்னு (எ) சிவபெருமாள்(வயது 19), பாளையங்கோட்டை சமத்துவபுரத்தை சேர்ந்த கார்த்திக் பாண்டியன்(வயது 29) ஆகிய மூன்று பேர் சேர்ந்துதான் ஐயப்பன் (எ) சுரேஷை கொலை செய்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து வல்லநாடு அருகே மலையடிவாரத்தில் பதுங்கியிருந்த இம்மூன்று பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது கொலை செய்யப்பட்ட ஐயப்பன் (எ) சுரேஷ் என்பவரின் தந்தை வேல்சாமியின் உறவுக்காரனான டேனியல்ராஜ் என்பவரை கடந்தாண்டு அன்பு, மஜ்னு மற்றும் மகேஷ் மகன் ஜீவா(வயது 24) ஆகியோர் தாக்கியபோது ஐயப்பன் (எ) சுரேஷ் இதனைத் தட்டிக்கேட்டுள்ளார்.
இதனையடுத்து 3 பேரும் ஐயப்பன் (எ) சுரேஷை தாக்கியுள்ளனர். இதுகுறித்து ஐயப்பன் (எ) சுரேஷ் அளித்த புகாரின் பேரில் திருநெல்வேலி சிவந்திப்பட்டி காவல் நிலையத்தில் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் கடந்த பொங்கல் விடுமுறையின் போது மீண்டும் அன்பு, வேல்சாமியிடம் தகராறு செய்ததில் வேல்சாமி அளித்த புகாரின் பேரிலும் சிவந்திபட்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மேற்படி 3 பேரும் தங்கள் மீது வழக்கு பதிவு செய்ய காரணமான வேல்சாமி மற்றும் அவரது மகன் ஐயப்பன் (எ) சுரேஷ் மீதும் முன்விரோதத்தில் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் தான் கடந்த 10.02.2024 அன்று அந்த முன்விரோதம் காரணமாக கொலையுண்ட ஐயப்பன் (எ) சுரேஷ் செய்துங்கநல்லூருக்கு வந்து புதிய குடும்ப அட்டை பெறுவதற்காக விண்ணபித்து விட்டு திரும்பி ஊருக்கு போகும் போது மேற்படி சம்பவ இடத்தில் வைத்து அன்பு, மஜ்னு மற்றும் அவர்களுடன் வந்த கார்த்திக் பாண்டியன் ஆகிய 3 பேரும் ஐயப்பன் (எ) சுரேஷை அரிவாள் மற்றும் கத்தியால் தாக்கி படுகொலை செய்துள்ளனர்.
பின்னர், தூத்துக்குடி தாளமுத்துநகர் பாரதிநகரில் தங்கிவிட்டு 11.02.2024 அன்று காலை அங்கிருந்து புறப்பட்டு திருநெல்வேலி நோக்கி இருசக்கர வாகனத்தில் வரும்போது வாகைகுளத்திற்கு அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து சறுக்கி அவர்கள் கீழே விழுந்ததில் அன்புக்கு இடது கையிலும், மஜ்னுக்கு வலது கையில் வீக்கமும், கார்த்திக் பாண்டியனுக்கு இடது கால் முட்டி மற்றும் பெருவிரலும் காயம் ஏற்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களிடமிருந்த ஆயுதங்களையும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
மேலும், தனிப்படை போலீசாரின் விசாரணையில் அன்பு, மஜ்னு, கார்த்திக் பாண்டியன் ஆகிய 3 பேரும் அவர்களது நண்பர்கள் மற்றொரு 3 பேருடன் சேர்ந்து ஏற்கனவே 10.02.2024 அன்று காலை திருநெல்வேலி மாவட்டம் பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ராமச்சந்திரன் மகன் பாபு என்பவரை கொலை செய்துவிட்டு பின்னர் அன்பு, மஜ்னு மற்றும் கார்த்திக் பாண்டியன் ஆகிய 3 பேரும் சேர்ந்து இதற்கு அடுத்தப்படியாக, ஐயப்பனையும் கொலை செய்ததும் தீவிர விசாரணையில் தெரியவந்தது.
அதாவது, 10ஆம் தேதி முதலில் திருநெல்வேலியில் வைத்து பாபுவை பெண் விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை செய்துள்ளனர். பின்னர், செய்துங்கநல்லூர் சென்று ஐயப்பனையும் கொலை செய்துள்ளனர். மேலும், 3வதாக தூத்துக்குடியில் மற்றொரு நபரையும் கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர். ஆனால், அதற்குள் போலீசாரிடம் சிக்கியுள்ளனர். இதற்கிடையில் கைதான 3 பேரையும் ஸ்ரீவைகுண்டம் நீதித்துறை நடுவர் எண் 1 அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: ஒரே நாடு ஒரே தேர்தலை திரும்பப் பெற தனித் தீர்மானம் - சட்டப்பேரவையில் முதலமைச்சர் தாக்கல்!