சென்னை: பெரம்பூரில் கடந்த ஜூலை 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், உண்மை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அனைத்து கட்சிகளும் குரல் எழுப்பினர்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக செம்பியம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்த நிலையில், சுமார் 28 பேரை செம்பியம் தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் காங்கிரஸ், அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகிகளும், பிரபல ரவுடிகளும், வழக்கறிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருவேங்கடம் என்ற ரவுடியை ஆயுதங்களைப் பறிமுதல் செய்ய அழைத்துச் சென்றபோது போலீசார் என்கவுண்டர் செய்தனர். இதையடுத்து, இந்த வழக்கில் 30 நபர்கள் மீது குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் 26 நபர்கள் மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆயுள் தண்டனை கைதியாக உள்ள A1 குற்றவாளி நாகேந்திரன் மீது குண்டாஸ் வழக்குப் பதிவு செய்யவில்லை. சம்போ செந்தில் மற்றும் மொட்டை கிருஷ்ணன் ஆகிய இரண்டு பேர் தலைமறைவாக உள்ளனர். இந்நிலையில் குண்டாஸ் பதிவு செய்யப்பட்ட 26 நபர்களை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறிவுரை கழகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காவல்துறையினர் இன்று (அக்.22) மாலை அழைத்து சென்றனர்.
இதையும் படிங்க: நீதிமன்றத்தில் ஆஜராக துப்பாக்கியுடன் வந்த ரவுடி.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்!
மேலும், அறிவுரை கழகத்தில் ஆஜர் படுத்திய 26 நபர்கள் மீதான குண்டர் சட்டத்தை உறுதி செய்வதற்கான விசாரணை நடந்தது. இதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறிவுரைக் கழகத்தில் 100-க்கும் மேற்பட்ட போலீசாரும், துப்பாக்கி ஏந்திய சிறப்பு அதிரடிப்படை போலீசாரும் பாதுகாப்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
ஓய்வு பெற்ற நீதிபதிகள் மோகன்ராம், அக்பர் அலி மற்றும் ஆனந்தி ஆகியோர் முன்னிலையில் 26 பேரும் ஒவ்வொருவராக விசாரணைக்கு ஆஜர் படுத்தப்பட்டனர். மேலும், அவர்களது உறவினர் ஒருவரும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இந்த விசாரணை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது. விசாரணை முடிந்தபின் அனைவரும் மீண்டும் சிறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்