சென்னை : மதிமுகவின் 30வது பொதுக்குழு கூட்டம் இன்று (ஆக 3) சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளர் துரை வைகோ, பொருளாளர் செந்திலதிபன், துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் 22 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
- நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 39 இடங்களிலும், புதுச்சேரியில் ஒரு இடத்திலும் என 40க்கு 40எனும் பெரும் வெற்றியை அளித்திருக்கின்ற வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்.
- திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் மதிமுக வேட்பாளர் துரை வைகோ வெற்றி பெறுவதற்கு துணை நின்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவருக்கும் கழக பொதுக்குழு நன்றிதெரிவித்துக் கொள்கிறது.
- நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம்.
- நீட் தேர்வு ஒட்டுமொத்தமாக ரத்து செய்யப்பட வேண்டும், தேசிய தேர்வு முகமை கலைக்கப்பட வேண்டும் கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டி தீர்மானம்.
- பேரிடர் நிதி ஒதுக்கீடு, மெட்ரோ ரயில் நிதி ஒதுக்கீடு உள்ளிடவற்றை வலியுறுத்தி மதிமுக சார்பில் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 10 மணிக்கு வருவாய் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது தொடர்பான தீர்மானம்.
- பேரறிஞர் அண்ணா அவர்களின் 116வது பிறந்தநாளான 2024 செப்டம்பர் 15 ஆம் தேதியன்று மதிமுக சார்பில், சென்னை காமராஜர் அரங்கத்தில் பட்டிமன்றம், கருத்தரங்கம், வாழ்த்தரங்கம் நடத்தி சிறப்பாக கொண்டாடுவது என்று பொதுக்குழு தீர்மானிக்கிறது.
- பாஜக அரசு இயற்றிய 3 குற்றவியல் சட்டங்களை ரத்து செய்து, நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்தி மாநிலங்களுடன் கலந்து பேசி கருத்தொற்றுமை அடிப்படையில் சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பான தீர்மானம்.
- மேலும் 2021 ஆம் ஆண்டு மேற்கொள்ள வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பை இந்திய அரசு தொடங்குவதுடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் இணைத்தே நடத்த வேண்டும் என வலியுறுத்தும் தீர்மானம்.
- மத்திய அரசும், மராட்டிய மாநில அரசும் பீமாகோரேகான் வழக்கில் பொய் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். மனித உரிமை போராளிகள் மீது புனையப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்று மதிமுக வலியுறுத்தும் தீர்மானம்.
- மனித உரிமை செயல்பாட்டாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, இது தொடர்பான சட்டத்தை தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றுமாறு கழகப் பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
- தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். அரசு போக்குவரத்து கழகங்களில் காலிப் பணியிடங்களை நிரந்தர தொழிலாளர்கள் மூலம் நிரப்ப வேண்டும். ஒப்பந்த பணியாளர் முறையை கைவிட வேண்டும் என்றும், அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஆகியோர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதுடன் பழைய ஓய்வு திட்டத்தை செயல்படுத்தவும் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
- மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர் குடும்பங்களின் மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் ஆகியவற்றை கருணையுடன் பரிசீலித்து தேவையான உதவி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தும் தீர்மானம்.
- கர்நாடக மாநிலம், தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறந்து விடுவதை தடுப்பதையே நோக்கமாகக் கொண்டிருப்பது கண்டனத்துக்குரியது என்பன உள்ளிட்ட 22 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: வடசென்னைக்கு புதிய டிஐஜி; 17 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - ஆடி அமாவாசை நாளில் தமிழக அரசு அதிரடி! - IPS Officers Transfer