மயிலாடுதுறை: தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை மீனவர்கள் பயன்படுத்தக்கூடாது என்று மீன்வளத்துறை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் மீனவ கிராமத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்தப்படுவதாக தரங்கம்பாடி தலைமையிலான மீனவக் கிராமத்தார் புகார் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த வாரம் சுருக்குமடி வலை, அதிவேக குதிரை திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்ட விசைப்படகு உள்ளிட்ட அரசால் தடைசெய்யப்பட்டவற்றை பயன்படுத்துவதை மீன்வளத்துறையினர் தடுக்க வேண்டுமென்று கூறி தரங்கம்பாடியில் 19 மீனவ கிராம மீனவர்கள் சாலை மறியல் போராட்டம் செய்ய முயன்றனர்.
அவர்களிடம் மீன்வளத்துறையினர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மறியல் போராட்டத்தைக் கைவிட்டனர். இதனையடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தில் சுருக்குமடி வலை, அதிவேக குதிரைத் திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்ட விசைப்படகு உள்ளிட்டவற்றை வைத்திருந்தால் கூட பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் நேட்டீஸ் ஓட்டியுள்ளனர்.
இதனையடுத்து நேற்று (புதன்கிழமை) காலை முதல் பூம்புகார் துறைமுகத்தில் உள்ள சுருக்குமடி வலைகள் பறிமுதல் செய்வதற்காக நாகை மீன்வளத்துறை இயக்குநர் இளம்வழுதி தலைமையில் உதவி இயக்குநர் மோகன்குமார் மற்றும் அதிகாரிகள் சென்றனர்.
அப்போது பூம்புகார் மீனவர்கள் 'நாங்கள் தடை செய்யப்பட்ட வலையைப் பயன்படுத்தவில்லை. துறைமுகத்தில்தான் வைத்துள்ளோம் அதனை யாரும் பயன்படுத்தவில்லை. கடலில் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்கும் போது அதிகாரிகள் ஆய்வு செய்து அதனை பறிமுதல் செய்துகொள்ளலாம்' என்று மீனவர்கள் தெரிவித்தனர்.
அரசால் தடைசெய்யப்பட்ட வலைகள் எங்கிருந்தாலும், அதனைப் பறிமுதல் செய்வதற்கு அதிகாரம் உண்டு என்று மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்ததால் மீனவர்களுக்கும், அதிகாரிகளுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து டிஎஸ்பிக்கள் ராஜ்குமார், லாமேக் ஆகியோர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.
தொடர்ந்து மாலையில் பூம்புகார் துறைமுகத்தில் இருந்த 20 லட்சம் மதிப்பிலான சுருக்குமடி வலையை மீன்வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து எடுத்து சென்றனர். அப்போது பூம்புகார் மீனவர்கள் 'உச்சநீதிமன்ற உத்தரவின்படி வாரத்தில் திங்கள் மற்றும் வியாழன் ஆகிய இரண்டு நாட்கள் சுறுக்குமடி வலையைப் பயன்படுத்தி 12 நாட்டிக்கல் தொலைவிற்கு அப்பால் மீன்பிடிக்க அனுமதி உள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறி தங்கள் வலையை மீன்வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாகத் தெரிவித்து' கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: சென்னை மெட்ரோ ரயிலில் தீப்பொறி? அலறி ஓட்டம்பிடித்த பயணிகள்..சிஎம்ஆர்எல் அளித்த விளக்கம்!