சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் வல்லம் வடகால் கிராமத்தில் இருக்கும் சிப்காட் பகுதியில் 706.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 18,720 பெண் பணியாளர்கள் பயன்பெறும் வகையில் சிப்காட் மெகா குடியிருப்பு வளாகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
இந்நிலையில், விடுதியின் முக்கியத்துவம் மற்றும் சிறப்பம்சம் என்ன? என்பது குறித்து தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தியாகராய நகரில் அமைந்துள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்பொழுது அவர் கூறுகையில், "குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர், பணியாளர்களின் நலனை மிக முக்கியமாக கருதுகிறார். தனியாக பெண்களுக்கு என்று gated community-யை இன்று திறந்தது வைக்கிறார். இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில், ஸ்ரீபெரும்புதூரில் இந்த குடியிருப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் 18,720 பெண் பணியாளர்கள் பயன்பெறவுள்ளனர். இந்த குடியிருப்பை முழுவதுமாக பாக்ஸ்கான் நிறுவனம் எடுத்து கொள்கிறது. பணிபுரியும் பெண்களுக்கு, வேலை பார்க்கும் இடத்திற்கு அருகிலேயே அவர்களுக்கு என்று தனி கிராமமே அங்கு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெண்களுக்காக வேலைவாய்ப்பு அதிகரிக்கும். மின் விநியோகம், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளும் உள்ளது.
மேலும் இந்த கட்டிடத்திற்கான முழு நிதியை தமிழக அரசு தான் கொடுத்துள்ளது. மாநிலத்தில் பிற பகுதிகளுக்கு இது போல கட்டடம் வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. முழுவதுமாக பெண்கள் இந்த கட்டிடத்தில் தங்க உள்ளனர். வரும் 27ஆம் தேதி முதலமைச்சர் வெளிநாடு செல்கிறார்.
தினம் தினம் முதலமைச்சர் சுற்றுப்பயணத்தின் விவரம் உங்களுக்கு தெரிவிக்கப்படும். பரந்தூர் விமான நிலையம், சிறப்பான முறையில் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது" என தெரிவித்துள்ளார்.