ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை தாலுகா, அம்மூர் மேட்டு தெருவைச் சேர்ந்த ரங்கநாதன் என்பவரின் 17 வயது சிறுமிக்கும், அவருடைய தாய் மாமன் பொண்ணுரங்கம் என்பவருடன் நாளை திருமணம் நடைபெற இருந்தது. இதில், துளியும் உடன்பாடு இல்லாத சிறுமி, தனக்கு திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை என்று வீட்டில் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால், அதனைக் கண்டு கொள்ளாமல் பெற்றோர்கள் வலுக்கட்டாயமாக சிறுமிக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த சிறுமி, வாலாஜா ரயில் நிலையம் அருகே தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், சிறுமியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக, வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
![தற்கொலை எண்ணத்தை கைவிடுக](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/06-09-2024/22388104_.png)
பின்னர், இந்த சம்பவம் குறித்து தமிழ்நாடு இரும்பு பாதை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், காவல்துறையினர் முதற்கட்ட தகவலின் படி, 17 வயதே ஆன சிறுமிக்கு திருமணம் செய்து வைக்க முயன்ற அவர்களது பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதுமட்டுமின்றி, சிறுமியை திருமணம் செய்ய ஒப்புகொண்ட நபரிடமும் போலீசார் விசாரணை நடத்த உள்ளதாகக் கூறப்படுகிறது. பெற்றோர் திருமணம் செய்ய கட்டாயப்படுத்தியதால், மனமுடைந்த சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ராணிப்பேட்டையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கிண்டியில் கிடைத்த மனித எலும்பு கூடுகள் முதல் மதுபோதையில் வாலிபர்கள் செய்த ரகளை வரை.. - சென்னை குற்றச் செய்திகள்!