சென்னை: தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் சுமார் 1.20 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைமுறைபடுத்தப்பட்டு வந்தது.
13வது ஊதிய ஒப்பந்தம் கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் காலாவதியானது. இதையடுத்து, தொழிற்சங்கங்களுடன் நடைபெற்ற பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி 14வது ஊதிய ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.
அதில் ஊதியத்தை பே மேட்ரிக்ஸில் பொருத்தி 5 சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்படும் எனவும், ஊதிய உயர்வு ஒப்பந்தத்துக்கான காலம் 4 ஆண்டுகள் எனவும் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்த ஊதிய ஒப்பந்தமும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் காலாவதியானது.
இதையடுத்து, போக்குவரத்து தொழிற்சங்கங்களின் 15வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தை விரைவில் தொடங்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், இன்று பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தொழிற்சங்கங்களுக்கு அரசு அழைப்பு விடுத்து இருந்தது.
அதனடிப்படையில், சென்னை குரோம்பேட்டை அரசு போக்குவரத்து பயிற்சி மையத்தில், போக்குவரத்து சங்கங்களின் 15வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை இன்று காலை 11 மணியளவில் துவங்கியது. இதில் போக்குவரத்து துறை செயலர் பணீந்திர ரெட்டி, போக்குவரத்துக் கழக 8 மண்டல இயக்குனர்கள் கலந்து கொண்டனர். 84 போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நடத்திய பேச்சுவார்தையில் பங்கேற்று உள்ளனர்.
அண்ணா தொழிற்சங்கம் சார்பில் கமலக்கண்ணன் தொ.மு.ச. சார்பில் நடராஜன், சிஐடியு சார்பில் ஆறுமுக நயினார், ஐ.என்.டி.யு. சார்பில் வில்சன் உட்பட 84 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். இதையடுத்து, ஒவ்வொரு தொழிற்சங்கத்தில் இருந்தும் ஒன்று அல்லது இரண்டு பிரதிநிதிகள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டு, அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பேச்சுவார்த்தையில், ஊதிய உயர்வு, தற்காலிகப் பணியாளர்களை நியமிக்கக் கூடாது, ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள படிகள் உள்ளிட்ட 20 கோரிக்கைகளை முன்வைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: புறப்பட்டாரா ஸ்டாலின்? அமெரிக்காவில் 17 நாட்கள்.. முதல்வர் பயணத்தை உற்றுநோக்கும் எதிர்க்கட்சிகள்!