சிவகங்கை: கல்லல் அருகில் உள்ள அரண்மனை சிறுவயலில் சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் கா.காளிராசா, கள ஆய்வாளர் கா.சரவணன் ஆகியோர் கள ஆய்வில் ஈடுபட்டிறுந்த நிலையில், அவர்கள் 148 ஆண்டுகள் பழமையான தாது பஞ்சகால ஜமீன்தார் கல்வெட்டை கண்டுபிடித்துள்ளனர்.
இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர் காளிராசா கூறுகையில், ‘‘கல்லல் அடுத்துள்ள அரண்மனை சிறுவயல் பகுதியானது நீர் நிலைகளும், வயல்வெளிகளும் நிறைந்த பகுதி. இங்குள்ள மும்முடீஸ்வரர் கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இப்பகுதியில், தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் அரண்மனை ஒன்றும் உள்ளது. இந்நிலையில் இங்குள்ள சீனக்கண்மாய் கலுங்குமடையில் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சீனக்கண்மாய்: அரண்மனை சிறுவயலிலிருந்து களத்தி அய்யனார் கோயிலுக்குச் செல்லும் வழியில் சீனக் கண்மாய் அமைந்துள்ளது.கண்மாயின் நடுவில் காணப்படும் குமிழி மடைத் தூண்களைக் கொண்டு இது பழமையான கண்மாய் என்பதை அறிய முடிகிறது.
அரண்மனை சிறுவயல் ஜமீன்தார்: சிவகங்கைச் சீமை இராமநாதபுரத்தில் இருந்து 1729 இல் பிரிக்கப்பெற்று சசிவர்ணத்தேவர் அவர்களால் 1730 ல் தெப்பக்குளம், அரண்மனை மற்றும் நகரம் உருவாக்கி முறையான அமைப்பாக ஆளப்பெற்றது. 1801ல் இருந்து இஸ்திமிரார் ஜமீன்தாராக, கௌரி வல்லவருக்கு அன்றைய ஆங்கிலேய ஆட்சியாளர்களால் முடி சூட்டப் பெற்று, அன்றிலிருந்து ஜமீன்தாரி முறைக்கு சிவகங்கை வந்தது.
கௌரி வல்லவர் அறந்தாங்கி காட்டில் வாழ்ந்த போது வேறு சமூகத்தை சார்ந்த மாணிக்க ஆத்தாள் என்பவரை விரும்பி மணந்தார். அவர் வழிவந்த வாரிசுகளே தற்போது சிறுவயல் ஜமீன்தராக இருந்து வருகின்றனர். இங்கிருந்த முத்துராமலிங்க ஜமீன்தார் பற்றி, என் சரித்திரம் நூலில் உ.வே.சா குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இவர்களது வாரிசுதாரர்கள் இன்றும் காளையார்கோயில் வைகாசி விசாகத் திருவிழாவில் ஐந்தாம் மண்டகப் படியை நடத்திவருவதோடு, காளையார் கோவில் தேரோட்டம், மற்றும் தெப்பத் திருவிழாவிற்கு தங்களது பங்களிப்பை அளித்து வருகின்றனர். கல்லல் சிவன் கோயிலிலும் எட்டாம் திருநாள் மண்டகப்படியும் இவர்களுடையதாக உள்ளது. இவர்கள் முன்னோர்கள் வாழ்ந்த அரண்மனை தற்போது மிகவும் இடிந்த நிலையில் இருந்தாலும் அதில் ஒரு பகுதியில் வேல், வாள், கம்பு, வளரி போன்ற ஆயுதங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
கல்வெட்டு அமைப்பு: சீனக் கண்மாயில், கலுங்கு மடை கரைப்பகுதிகள் செம்புராங்கல்லாலும். நீர் வெளியேறும் இடங்கள் வெள்ளைக் கற்களாலும் கட்டப்பட்டுள்ளன. இதில் கரையை ஒட்டியுள்ள கட்டுமான பகுதியில் சுமார் 2.5 அடி நீளமும் ஒன்றரை அடி அகலமும் உடையதாகக் கல்வெட்டு உள்ளது.
கல்வெட்டுச் செய்தி: இதில், 1876 ஆம ஆண்டு மே 8ம் தேதி தாது வருசம் சித்திரை 28ம் தேதி சிவ சப் கட்டணூர் ஜமீன்தார் முத்துவடுகு முத்துராலிங்க தேவர்கள் என்று எழுத்தப்பட்டுள்ளது. இதில் சிவ சப் என்பது சிவகங்கை சார்பு என பொருள் படுவதாகக் கொள்ளலாம். கண்மாயை முத்துவடுகு என்ற முத்துராமலிங்க ஜமீன்தார் கண்மாய் மற்றும் கலுங்கை சீர் செய்தது தெரிகிறது.
தாது பஞ்சம் காலம்: 1876 ஆம் ஆண்டு தொடங்கி 1878 வரை தாது பஞ்ச காலம் என்று கூறுகின்றனர். இந்த தாது பஞ்சம், மிகப்பெரிய பஞ்சமாக ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தப் பஞ்ச காலத்தில் மக்கள் பட்டினியால் இலட்சக்கணக்கில் இறந்ததாகவும் தெரிகிறது. இதை சென்னை மாகாணப் பஞ்சம் என்றும் அழைக்கின்றனர். சென்னை மட்டுமல்லாது கர்நாடகா, மகாராஷ்டிரம் வரை இப்பஞ்சம் பரவி இருந்ததாக கூறப்படுகிறது.
பஞ்ச லட்சண திருமுக விலாசம்: சென்னை மாகாண தாது பஞ்சத்தை கருப்பொருளாகக் கொண்டு சிவகங்கை அரசவை புலவரும், மிராசு கணக்காளருமான பிரமனூர் வில்லியப்ப பிள்ளை பாடிய எள்ளல் சுவை மிகுந்த நூல் பஞ்சலட்சண திருமுக விலாசமாகும்.
இந்நூலில், மதுரை சொக்கநாதரிடம் பஞ்சத்தின் பாட்டை மக்கள் முறையிட, அவர் சிவகங்கை ஜமீன்தார் துரைசிங்கம் அவர்களிடம் முறையிட அனுப்பி வைத்ததாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் வழி சிவகங்கை தாது பஞ்ச நேரத்தில் ஓரளவு செழிப்பாக இருந்ததாகவும் கருத முடிகிறது” என்று தெரிவித்தார்.
சிவகங்கை தொல்நடைக் குழு சில ஆண்டுகளுக்கு முன்னர், தாது பஞ்ச காலத்தில் இலங்கையில் தொழில் செய்த தனிநபர் ஒருவர், குளம் மற்றும் வரத்துக் காலை சீர் செய்து உள்ளுர் மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கிய கல்வெட்டை சிவகங்கை அருகே உள்ள இடைய மேலூரில் கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது.