சென்னை: அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அன்வர் உசைன் என்பவர், கடந்த சில மாதங்களாக குடும்பத்துடன் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள கிராமத்தில் குடியேறி வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், இவருடைய மகள் தஸ்மீத் தம்சமீம் (13) என்ற சிறுமியை, அதே பகுதியில் உள்ள பள்ளியில் சேர்ப்பதற்கு திட்டமிட்டு வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி பள்ளியில் சேர்ப்பதற்காக அவரது தாய் காலையில் எழுப்பிய போது, அவர் எழாமல் படுக்கையில் படுத்துக் கொண்டிருந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தாய், சிறுமியைக் கண்டித்து உள்ளார். பின்னர், அவர் வேலைக்குச் சென்று மீண்டும் மாலை வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டில் இருந்து சிறுமி காணாமல் போனது தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
அந்தப் புகாரின் அடிப்படையில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சிறுமி திருவனந்தபுரம் ரயில் நிலையத்திற்குச் சென்றது தெரியவந்தது. பின்னர், திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அங்கிருந்து அசாம் செல்லும் ரயிலில் ஏறிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து அந்த ரயில் செல்லும் அனைத்து ரயில் நிலையங்களிலும் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சிறுமி கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து சென்னை செல்லும் ரயிலில் ஏறிச் சென்றது தெரியவந்தது. பின்னர், கேரள மாநில போலீசார், தமிழ்நாடு ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்து அவர்களது உதவியை நாடி உள்ளனர்.
இதையடுத்து, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ரயில்வே போலீசார் ஆய்வு செய்தபோது, சிறுமி அங்கு நின்று கொண்டிருந்த மற்றொரு ரயிலில் ஏறி விசாகப்பட்டினம் சென்றது தெரியவந்தது. பின்னர் தனிப்படை போலீசார் விசாகப்பட்டினம் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்து, அங்கு சென்று சிறுமியை மீட்டனர்.
இதையடுத்து சிறுமியை சென்னை அழைத்து வந்த ரயில்வே போலீசார், கேரள மாநில போலீசாருக்கு தகவல் தெரிவித்து அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க : இரு மாநில போலீசாரை விழிபிதுங்க வைத்த அசாம் சிறுமி.. கேரளாவில் நடந்தது என்ன? - child missing