தேனி: தேனி மாவட்டம், கம்பம் கிளப் ரோடு மணி நகரம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் ஜெயவர்மன் (17). இவர் கம்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த நிலையில், தற்பொழுது நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 600-க்கு 494 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இந்த நிலையில், மாணவன் வீட்டில் தனியாக இருந்த பொழுது தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வெகு நேரமாக மாணவர் வீட்டில் இல்லாததால் உறவினர்கள் மாணவனை தேடிப் பார்த்தபோது, அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. பின்னர், இது குறித்து கம்பம் தெற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மாணவரை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கவில்லை என, மதிப்பெண்கள் வெளியிட்ட நாளில் இருந்து மன உளைச்சலில் இருந்ததாக மாணவனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், தான் 500க்கு மேல் மதிப்பெண் வாங்குவேன் என நினைத்திருந்ததாகவும், தன்னால் 500க்கு மேல் வாங்க முடியவில்லை என்ற மன அழுத்தத்தில் மாணவர் இருந்ததாகவும் அவரது பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆன்லைன் கடன் செயலியின் அதிக அழுத்தம்.. சென்னையில் இளைஞர் தற்கொலை! - Online Loan App Suicide