தேனி: சின்னமனூர் அருகே உள்ள எம்.பெருமாள்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். கூலித் தொழிலாளியான இவரது 2வது மகன் கோபிநாத், எரசக்கநாயக்கனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகின்றார். தற்பொழுது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வரும் சூழ்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த மாணவன் கோபிநாத், தேர்வெழுதச் செல்ல முடியாமல் வீட்டிலிருந்த படியே சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
மேலும், வயிற்று வலியின் காரணமாகத் தேர்வு எழுதச் செல்ல முடியாமல் இருந்த மாணவன் கோபிநாத் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று (திங்கட்கிழமை) அவரது பெற்றோர்கள் வழக்கம்போல், கூலி வேலைக்குச் சென்றுள்ளனர். அப்போது வீட்டிலிருந்த கோபிநாத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அதையடுத்து, வேலைக்குச் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்த அவரது தந்தை செந்தில்குமார், வீட்டிற்குள் சென்று பார்த்தபோது கோபிநாத் தற்கொலை செய்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, உடனடியாக அவரது பெற்றோர்கள் சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அவரை தூக்கிச் சென்றுள்ளனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பின்னர் இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாணவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகக் கொண்டு செல்லப்பட்டது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது, அரசுப் பள்ளிகள் பொதுத் தேர்வு நடக்கும் நேரத்தில், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை என்ற ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.