திண்டுக்கல்: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், கடந்த மார்ச் 26ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை 4,107 மையங்களில் நடைபெற்றது. இதில், மொத்தம் 9 லட்சத்து 10 ஆயிரத்து 24 மாணவ மாணவிகள் தேர்வெழுதினர்.
இது தவிர, தனித்தேர்வர்களாக 28 ஆயிரத்து 827 பேரும், சிறைவாசிகள் 235 பேரும், இந்த பொதுத்தேர்வை (Tamil Nadu 10th Result 2024) எழுதினர். இந்நிலையில், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியது. இதில் மொத்தம் 91.55 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த பொதுத்தேர்வில் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த 'காவியா ஸ்ரீயா' என்ற பள்ளி மாணவி 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ரோட்டு புதூரைச் சேர்ந்தவர் விவசாயி கருப்புசாமி - ரஞ்சிதம் தம்பதி. இவர்களது மகள் காவியா ஸ்ரீயா, ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள கொசவபட்டி அக்ஷயா அகாடமி பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி இருந்தார்.
இந்நிலையில், இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், 499 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். இது குறித்து மாணவி காவ்யா ஸ்ரீயா செய்தியாளர்களிடம் பேசுகையில், "எங்களது குடும்பம் விவசாயக் குடும்பம். எனது தாய், தந்தையர் கஷ்டப்பட்டு என்னைப் படிக்க வைத்து வருகின்றனர்.
அதேபோல், ஆசிரியர்கள் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர். ஆசிரியர்கள், பெற்றோர் உறுதுணையால் தற்போது அதிக மதிப்பெண் எடுக்க முடிந்தது. எனது லட்சியம் ஐஏஎஸ் ஆக வெற்றி பெறுவது. விவசாயக் குடும்பத்திலிருந்து படித்து தற்போது வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என்று கூறினார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாணவியின் தாயார் ரஞ்சிதம், “ஒட்டன்சத்திரம் ரோட்டுப்புதூரில் குடியிருந்து வருகிறோம். நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம். எங்களின் மகள் காவியா ஸ்ரீயா, பத்தாம் வகுப்பில் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
அதேபோல், அவருக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி. மேலும், விவசாயக் குடும்பத்திலிருந்து இச்சாதனையைப் படைத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எனது மகளின் லட்சியமான ஐஏஎஸ் படிப்பதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்" என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.
இதையும் படிங்க: 10ஆம் வகுப்பு ரிசல்ட் வெளியீடு.. முதலிடம் பிடித்த அரியலூர் - வாழ்த்துகள் கூறிய ஆட்சியர்! - Ariyalur 10th Result