தூத்துக்குடி: கோவில்பட்டி பகுதியில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து, மர்ம நபர்கள் 100 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் குறித்து, கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சுபா நகர், பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (43). மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அடுத்த சின்ன நத்தம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரபா சிபோரா (40). கோவில்பட்டி அருகே உள்ள திருவேங்கடத்தில், தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், நேற்று மாலை 3 மணியளவில், இவர் தனது குடும்பத்தோடும், ராஜபாளையத்தை சேர்ந்த உறவினர்களுடன் திருநெல்வேலிக்கு ஜவுளி எடுப்பதற்காக சென்றுள்ளனர். பின்னர், இரவு 8 மணி அளவில் வீட்டுக்கு திரும்பியுள்ளனர். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டின் உள்ளே இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்த நிலையில் இருந்துள்ளன.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்த நிலையில், பீரோவில் இருந்த சதீஷ்குமாருக்கு சொந்தமான 50 சவரன் தங்க நகைகள் மற்றும் ராஜபாளையத்தை சேர்ந்த அவரது உறவினரான பிரியரூபாவதிக்கு சொந்தமான 50 சவரன் தங்க நகைகள் என மொத்தமாக 100 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து, சதீஷ்குமார் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் அடிப்படையில், டி.எஸ்.பி. வெங்கடேஷ் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அதனைத்தொடர்ந்து, கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை ஆய்வு செய்தனர். மேலும், மோப்ப நாய் வரவைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனிப்படை குழு அமைக்கப்பட்டு அவர்கள் அப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
இதையும் படிங்க: கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் - திமுகவின் சதியை அம்பலப்படுத்தியுள்ளோம்: அமைச்சர் எல்.முருகன் பிரேத்யேக பேட்டி! - L Murugan