சென்னை: சென்னையிலிருந்து மும்பை செல்லும் தனியார் பயணிகள் விமானம், நேற்று நள்ளிரவு சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து புறப்படத் தயாரானது. அந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளின் உடைமைகளைப் பாதுகாப்பு அதிகாரிகள் ஸ்கேன் மூலம் பரிசோதித்து அனுப்பிக் கொண்டு இருந்தனர்.
அப்போது, மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த விக்கி ஜெகதீஷ் பாத்தியா (48) என்ற பயணியின், கையில் எடுத்துச் செல்லும் பையை (Hand bag)பாதுகாப்பு அதிகாரிகள் வாங்கி பரிசோதித்தனர். அப்போது அந்தப் பையில் பிஸ்கட்கள் மற்றும் துணிகள் மற்றும் மட்டுமே இருப்பதாக அந்த மும்பை பயணி கூறினார்.
ஆனாலும், மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை அதிகாரிகள் சந்தேகத்தில் அந்தப் பையை ஸ்கேன் செய்து பார்த்தபோது, அதற்குள் கட்டுக் கட்டாகப் பணம் இருப்பது தெரிய வந்தது. இதை அடுத்து அந்தப் பையைத் திறந்து பார்த்த சோதித்த போது, பையின் அடிப்பாகத்தில், லைனிங் துணிகளால் ரகசிய அறை இருந்ததைக் கண்டுபிடித்தனர்.
அந்த ரகசிய அறைக்குள் 13 பார்சல்கள் இருந்தன. அந்த பார்சல்களில் அமெரிக்க டாலர் மற்றும் சவுதி ரியால் போன்ற வெளிநாட்டு பணம் பெருமளவு இருந்தன. இதை அடுத்துப் பாதுகாப்பு அதிகாரிகள் அந்தப் பயணியின் மும்பை பயணத்தை ரத்து செய்தனர்.
மேலும், பணம் எண்ணும் இயந்திரங்களைக் கொண்டு வந்து, எண்ணிப் பார்த்தபோது, ரூபாய் ஒரு கோடி 57 லட்சம் மதிப்புடைய, வெளிநாட்டு பணம் இருந்ததைக் கண்டுபிடித்து, அதைப் பறிமுதல் செய்தனர். அதோடு இந்தப் பணத்தைக் கடத்த முயன்ற மும்பை பயணியையும், பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்து, சென்னை விமான நிலையத்தில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
அவர்கள் ரூ.1.57 கோடி மதிப்புடைய வெளிநாட்டுப் பணக் கட்டுகளுடன், கடத்தல் மும்பை பயணியை, தன்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் இந்த பணம் ஹவாலா பணம் என்று தெரிய வருகிறது. எனவே இந்தப் பணத்தை, இவரிடம் சென்னையிலிருந்து கொடுத்துவிட்ட மர்ம நபர் யார்? இவர் மும்பையில் இந்த பணத்தை யாரிடம் கொடுக்க எடுத்துச் செல்கிறார்? என்று தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: சிந்தப்பள்ளி பட்டாசு ஆலை விபத்து; உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!