கொல்கத்தா: மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் மர்மமான முறையில் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொல்கத்தாவை சேர்ந்த 28 வயதான இளம் கிரிக்கெட் வீரர் அசிப் ஹுசைன் (Asif Hossain). இந்நிலையில், பயங்கர காயங்களுடன் அசிப் ஹுசைன் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று (செப்.30) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். 28 வயதான அசிப் ஹுசைனின் மறைவு அவரது குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள், சக விளையாட்டு வீரர்கள் என அனைவரையும் உலுக்கியது.
என்ன காரணம்?
அண்மையில் நடைபெற்ற பெங்கால் ப்ரோ டி20 லீக் ஆட்டத்தில் 99 ரன்கள் விளாசி அசிப் ஹுசைன் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் இழுத்துள்ளார். தொடர்ந்து முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் ஜொலித்து வந்த அசிப் ஹுசைன் நிச்சயம் கிரிக்கெட்டில் எட்ட முடியாத இடத்திற்கு செல்வார் என அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில், இந்த துயர சம்பவம் அரங்கேறி உள்ளது.
நேற்று வழக்கம் போல் பயிற்சி முடித்து வந்த அசிப் ஹுசைன், வீட்டு மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து உள்ளார். இதனால் அவருக்கு தலையில் படுகாயம் அடைந்ததாக சொல்லப்படுகிறது. ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை குடும்பத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இருப்பினும் அவரது உயிர் பாதி வழியிலேயே பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு 95 ரன்கள் இலக்கு! வெற்றி யாருக்கு? - Ind vs Ban 2nd Test Cricket