ஐதராபாத்: 9வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் கடந்த ஜூன் 2ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. குரூப் சுற்று ஆட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில், அதில் ஒவ்வொரு குரூப்பிலும் முதல் இரண்டு இடங்களை பிடித்து அணிகள் அடுத்த சுற்றான சூப்பர் 8 சுற்றில் விளையாடி வருகின்றன.
இந்நிலையில், சூப்பர் 8 சுற்றில் நேற்று (ஜூன்.22) நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி வரலாறு காணாத வெற்றியை பெற்றது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும், ஆப்கானிஸ்தான் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளருமான லால்சந்த் ராஜ்புத் ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்தார்.
அவர் கூறுகையில், "எனக்கு ஆச்சரியமில்லை, ஆப்கான் வீரர்கள் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. 50 ஓவர் போட்டிகளில் ஆஸ்திரேலியாவை அவர்களால் வெல்ல முடியவில்லை, ஆனால் இந்த வெற்றி தற்போது கிடைத்துள்ளது" என்றார். மேலும், "ஆஸ்திரேலியா எப்போதுமே ஆப்கானிஸ்தானுக்கு எதிராக போராடி வருகிறது.
எனவே இது அவர்கள் எதிர்பார்த்த வெற்றி தான். கடந்த ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் கைகூடாமல் போனது. உலக சாம்பியன் அந்தஸ்து கொண்ட ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது ஆப்கானிஸ்தான் புதுஉத்வேகத்தை வழங்கும். இந்த வெற்றியின் மூலம் அவர்கள் பெறும் நம்பிக்கை மிகப் பெரியதாக இருக்கும்" என்றார்.
2024ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி பெற்ற வெற்றி என்பது உலக கோப்பை கிரிக்கெட்டில் அந்த அணிக்கு புதிய பாதையை வகுக்க கிடைத்த வாய்ப்பாகும். ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கானை பாராட்டிய அவர், ஆப்கான் அணியின் சிறந்த கேப்டன்களில் ஒருவர் என்று கூறினார்.
ரஷீத் கான் ஐபிஎல் மற்றும் உலகம் முழுவதும் விளையாடி வருவதால், அவருடன் விளையாட்டு அறிவு என்பது அதிகளவில் காணப்படுகிறது. நுட்பமாக பந்துவீசி எதிரணிக்கு நெருக்கடி கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு வித்தைகளில் அவர் தெளிவு பெற்றவராக உள்ளார் என்று கூறினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தைப் பார்கையில் அவரது தலைமைக் குணமும் சேர்ந்து வெளிக் கொணர்ந்து இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்றார்.
ஆஸ்திரேலியா அணி தொடர்ச்சியாக ஒருநாள் மற்றும் டி20 உலக கோப்பைகளை வென்றுள்ள போதிலும், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடும் போராட்டத்தை எதிர்கொண்டது. ஆப்கானிஸ்தானிடம் தோல்வியை தழுவுவதில் இருந்து தப்பிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அது பயனளிக்கவில்லை என்பது தான் நிதர்சனம்" என்று லால்சந்த் ராஜ்பூத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இரண்டு முறை ஹாட்ரிக்... டி20 உலகப் கோப்பையை சிதறவிட்ட பேட் கம்மின்ஸ்! - T20 World Cup 2024