ஐதராபாத்: பாரீஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கமும், பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் தங்கப் பதக்கமும் வென்றனர். இந்நிலையில், இவ்விருவரின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக பாரீஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற கையோடு இருவரும் கூட்டாக பேட்டி அளித்தனர்.
அப்போது நெறியாளர், பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமின் பயோபிக்கை படமாக எடுத்தால் எந்த நடிகர் அவரது கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என நீரஜ் சோப்ராவிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த நீரஜ் சோப்ரா, அர்ஷத் நதீம் அதிக உயரம் கொண்டவர் என்பதால் அவரது பயோபிக்கில் அமிதாப் பச்சன் நடித்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தார்.
அதேபோல் நீரஜ் சோப்ராவின் பயோபிக்கில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என அர்ஷத் நதீமிடம் நெறியாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அர்ஷத் நதீம், நீரஜ் சோப்ரவின் பயோபிக் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கக் கூடிய வகையில் இருக்கும் என்பதால் அந்த கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்தால் நன்றாக இருக்கும் என்றார்.
இந்நிலையில் இருவரது வீடியோவும் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. பாரீஸ் ஒலிம்பிக் நிறைவடைந்த நிலையில், பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் நாடு திரும்பினார். பாகிஸ்தானில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதேநேரம் பாரீஸ் ஒலிம்பிக் முடிந்த கையோடு நீரஜ் சோப்ரா ஜெர்மனி சென்றார்.
முன்னதாக இதுகுறித்து பேசிய நீரஜ் சோப்ரா, பாரீஸ் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள மனதளவில் தான் தயாராக இருந்த போதும், உடலளவில் முழுமை பெற முடியாகவில்லை என்றும் காலில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இறுதிப் போட்டியில் சரிவர செயல்பட முடியவில்லை என்றார். அதன் காரணமாக ஜெர்மனி சென்று உள்ள நீரஜ் சோப்ரா அங்கு மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெற உள்ளார்.
மேலும் ஆகஸ்ட் 22ஆம் தேதி சுவிட்சர்லாந்தின் லொசன்னே நகரில் டைமண்ட் லீக் தொடர் நடைபெற உள்ளது. அதில் கலந்து கொள்ளவும் நீரஜ் சோப்ரா முடிவு எடுத்து உள்ளதால் ஏறத்தாழ ஒன்றரை மாதங்களுக்கு பின் அவர் நாடு திரும்புவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜிம்பாப்வேயில் மகளிர் 20 ஓவர் உலக கோப்பை? 20ஆம் தேதி இறுதி முடிவு - Womens T20 World Cup 2024