சவுதாம்டன்: உலகின் தலைசிறந்த லெக் ஸ்பின்னர்களில் ஒருவரான ரஷித் கான் ஓவரில் 5 சிக்ஸர்களை தொடர்ச்சியாக பறக்கவிட்டு கிரிக்கெட் அரங்கில் தன்னுடைய பெயரை மீண்டும் ஒலிக்க செய்துள்ளார் க்ரைன் பொல்லார்ட்.
என்ன நடந்தது என்பதை விரிவாகப் பார்ப்போம். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த வீரர் க்ரைன் பொல்லார்ட் ஓய்வை பெற்றுள்ளார். இருப்பினும் மும்பை அணியின் எமிரேட்ஸ், நியூயார்க் உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடி அவர், தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் தி ஹண்ட்ரட் (The Hundred) தொடரில், சதர்ன் பிரேவ் (Southern Brave) அணிக்காக விளையாடி வருகின்றனர்.
மற்ற தொடர்களை காட்டிலும் இங்கிலாந்தில் நடத்தப்படும் இந்த போட்டி சற்று வித்தியாசமானதாகும். ஏன் என்றால் ஐபிஎல், டிஎன்பிஎல் போன்ற போட்டிகள் எல்லாம் ஓவர்கள் அடிப்படையில் நடைபெறும். ஆனால் இந்த லீக் போட்டியில் ஒரு இன்னிங்சுக்கு 100 பந்துகளை என்ற முறையில் நடைபெறும்.
அதனால் தான் இந்த தொடருக்கு 'தி ஹண்ட்ரட்' என பெயர் வைத்துள்ளனர். இந்த தொடரின் 24வது லீக் போட்டியில் சதர்ன் ப்ரேவ் மற்றும் ட்ரெண்ட் ராக்கெட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இங்கிலாந்தில் உள்ள ரோஸ் பவுல் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ட்ரெண்ட் ராக்கெட்ஸ் அணி 100 பந்துகளில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 126 ரன்களை குவித்தது.
Kieron Pollard hitting FIVE SIXES IN A ROW! 😱#TheHundred | #RoadToTheEliminator pic.twitter.com/WGIgPFRJAP
— The Hundred (@thehundred) August 10, 2024
அந்த அணியில் அதிகபட்சமாக டாம் பேன்டன் 17 பந்துகளில் 30 ரன்களை சேர்த்தார். சதர்ன் ப்ரேவ் அணி சார்பாக கிறிஸ் ஜோர்டன் 3 விக்கெட்டுகளையும், பிரிக்ஸ் மற்றும் ஆர்ச்சர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
இதன்பின்னர் களமிறங்கிய சதர்ன் ப்ரேவ் அணி 76 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் மேட்ச்சை சுலபமாக வெற்றி விடலாம் என எண்ணி நட்சத்திர பவுலரான ரஷித் கான் பவுலிங் செய்ய அழைத்தார் அந்த அணி கேப்டன் லூயிஸ் கிரிகோரி.
ஆனால் அங்கு நடந்ததே வேறு, ரஷித் கான் வீசிய 5 பந்துகளையும் சிக்ஸர்களுக்கு விளாசி அலறவிட்டர் பொல்லார்ட். சிறப்பாக ஆடிய அவர் 23 பந்துகளில் 5 சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 45 ரன்களை விளாசி ரன் அவுட்டானார்.
இறுதியாக சதர்ன் ப்ரேவ் அணி, 99 பந்துகளில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 127 ரன்களை குவித்து வெற்றிபெற்றது. இதனைக் கண்ட மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் அறிவித்த ஓய்வைத் திரும்பப் பெற்று விட்டு மீண்டும் மும்பை அணிக்காக விளையாட வேண்டும் என சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: வினேஷ் போகத்துக்கு வெள்ளிப் பதக்கம்? இன்று தீர்ப்பு வெளியாகிறது!